பந்தலூர்,ஏப்.1: பந்தலூர் அருகே பிதிர்காடு பகுதியில் ஒருவர் நாக பாம்பை கையில் பிடித்தவாறு நெடுஞ்சாலையில் நடந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல் செல்லும் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒருவர் நடந்து சென்றார். அவர் தனது கையில் நாக பாம்பு ஒன்றை தலை கீழாக பிடித்திருந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், சிறுவர்கள் பீதி அடைந்தனர்.
திடீரென்று அந்த நபர் பிதிர்காடு வனச்சரகர் அலுவலகம் அருகே பாம்பை விட்டுச் சென்றார். சம்பவம் குறித்து அறிந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த விசாரித்தனர். அப்போது அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பாம்பை பிடித்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் உத்தரவுபடி அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
