×

தேர்தல் வேலை ரொம்ப கஷ்டங்க… 2 ஆயிரம் பேர் பணி விடுவிப்பு கேட்டு மனு

 

கோவை,மார்ச்29: கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 17,122 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். 3563 ஓட்டு சாவடிகளில் ஒரு ஓட்டு சாவடிக்கு 4 பேர் வீதம் பணி செய்ய இருக்கிறார்கள். இவர்களுக்கும், 10 சதவீதம் ரிசர்வ் ஊழியர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்வித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணி, மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி உள்பட பல்வேறு துறைகளில் இருந்து அரசு ஊழியர்கள் பணி ஆணை பெற்றனர். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு என்ன பதவி என்பது மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது.

யார் யாருக்கு எந்த சட்டமன்ற தொகுதியில் பணி, எந்த ஓட்டு சாவடி என ஓட்டு பதிவுக்கு முந்தைய நாள் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் உடல் நலக்குறை எனக்கூறி இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் பணியிலிருந்து விலக்கு கேட்டு விண்ணப்ப மனு கொடுத்தனர். டாக்டர் மருத்துவ சான்றுகளுடன் அரசு ஊழியர்கள் குவிந்து மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலர்கள் அதிகளவு உடல் நலன் பாதிப்பை காரணமாக கூறுவதுடன் கட்டாயம் பணி விலக்கு வேண்டும் என புலம்பினர்.

இதனால் யார் சரியான மருத்துவ பாதிப்பில் இருக்கிறார்கள், எந்த ஆவணம் சரியானது என உறுதி செய்ய முடியாமல் அதிகாரிகள் தவிப்படைந்துள்ளனர். ஒரே ஒரு நாள் தான் தேர்தல் பணி. அதையும் செய்ய மறுத்து தேர்தல் பணியில் விலக்கு கேட்பது சரியல்ல, ஏன் தேர்தல் பணிக்கு பயப்படுகிறீர்கள் என அதிகாரிகள் கேட்ட போது அதற்கு பலர் சரியான பதில் தரவில்லை. இது தேர்தல் பிரிவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Tags : Romba Kastanga ,KOWAI ,KOWAI DISTRICT ,District Collector's Office ,
× RELATED வாடகை வீட்டில் வசித்தவரிடம் நகை திருட்டு: வீட்டு உரிமையாளர் மகன் கைது