கோவை, மார்ச் 29: கோவையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வீட்டின் உரிமையாளர் மகனை போலீசார் கைது செய்தனர். கோவை பாப்பநாயக்கன்பாளையம், செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நல்லசிவம் (30). இவரது மனைவி ரேஷ்மா (26). இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 26ம் தேதி காலை, தம்பதியினர் இருவரும் வழக்கம்போல வேலைக்குச் சென்றனர். மதியம் அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர், ரேஷ்மாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேஷ்மா, தனது கணவருக்கு போனில் தெரிவித்து உடனே வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வெள்ளி பிரேஸ்லெட் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரேஷ்மா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் ரேஷ்மா தங்கி உள்ள வீட்டின் உரிமையாளரின் மகன் குமரேசன் என்கிற ராஜ்குமார் (29), தம்பதியினர் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடி சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் குமரேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகை மற்றும் வெள்ளியை பறிமுதல் செய்தனர்.
