×

ஒரு மாதத்திற்கான சமையல் எரிவாயு 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு: பற்றாக்குறை என்பது தவறான தகவல்; பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயுவுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. அடுத்த ஒரு மாதத்திற்கு விநியோகம் செய்ய போதுமான 8 லட்சம் டன் சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளது. அடுத்த 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. எனவே பற்றாக்குறை என்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்கு ஆசியா போர் காரணமாக வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பான பீதி நிலவி வருகிறது. பொதுமக்கள் ஏராளமானோர் பெட்ரோல் பங்க் மற்றும் சிலிண்டர் நிறுவனங்கள் முன்பாக மைல் கணக்கில் காத்துக்கின்றனர். இந்நிலையில், போருக்கு பிறகு முதல் முறையாக ஒன்றிய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கச்சா எண்ணெய், எரிபொருட்கள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் கையிருப்பு விவரங்களை நேற்று வெளியிட்டுள்ளது.

அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் எங்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு பற்றாக்குறை இல்லை. நாட்டின் பெட்ரோல் மற்றும் எல்பிஜி விநியோக நிலை முழுமையாக பாதுகாப்பாகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டு சாதாரணமாக இயங்கி வருகிறது. எனவே பீதியை பரப்புவதற்காக தீய நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் தவறான தகவல் பிரசாரத்தால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.

ஒவ்வொரு இந்திய சுத்திகரிப்பு நிலையமும் (கச்சா எண்ணெயை பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களாக மாற்றும் நிலையம்) 100 சதவீதத்திற்கும் அதிகமான பயன்பாட்டுத் திறனில் இயங்கி வருகிறது. எனவே, அடுத்த 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே உறுதி செய்துள்ளன. விநியோகத்தில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை. ஈரான் போரால் கச்சா எண்ணெய் விநியோக பாதி பாதிக்கப்பட்டாலும், பிற இடங்களில் இருந்து தேவையான கச்சா எண்ணெய் பெறப்பட்டுள்ளது.

போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவிடம் 74 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு இருந்தது. தற்போது 2 மாதத்திற்கு தேவையான கச்சா எண்ணெய் உள்ளது. இந்திய விநியோகத்தில் பெரும்பகுதியை கொண்டுள்ள வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், எல்பிஜி விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வந்தது. இவ்விஷயத்தில், 800,000 டன் எல்பிஜி சரக்குகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது இது ஒரு முழு மாதத்திற்கான விநியோகத்திற்கு போதுமானது. எனவே உலகளவில் என்ன நடந்தாலும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குத் தேவையான சீரான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா அடுத்த பல மாதங்களுக்கும் முழுமையாக பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* ஓட்டல்களுக்கு நுகர்வோர் அமைப்பு எச்சரிக்கை
வர்த்தக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் பல ஓட்டல்கள், உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கான பில்லில் காஸ் செலவு என தனி கட்டணம் வசூலிக்கின்றன. இத்தகைய கூடுதல் கட்டணத்தை விதிக்க வேண்டாம் என்றும் மீறினால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) எச்சரித்துள்ளது.

* பைக்கிற்கு ரூ.200, கார்களுக்கு ரூ.2,000 மட்டுமே எரிபொருள் கலெக்டர் உத்தரவால் பரபரப்பு
மேற்கு ஆசிய நாடுகளிடையேயான மோதல் காரணமாக, சத்ரபதி சம்பாஜிநகரில் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.200 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000க்கு மட்டுமே எரிபொருள் வழங்க வேண்டுமென சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு மேல் வழங்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாட்டில்கள், கேன்கள் மற்றும் டிரம்களில் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில், அன்றாட இருப்பை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

Tags : Petroleum Ministry ,New Delhi ,India ,
× RELATED அவைக்கு டி சர்ட் அணிந்து வரும்...