×

அவைக்கு டி சர்ட் அணிந்து வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விட பிரியங்கா பெஸ்ட்: ஒன்றிய அமைச்சர் ரிஜிஜூ விமர்சனம்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விட பிரியங்கா காந்தி பெஸ்ட் என ஒன்றிய அமைச்சர் ரிஜிஜூ விமர்சித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரிஜிஜூ, “தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியுடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் இருவரும் வௌியே பார்க்கும்போது நன்றாக பேசி கொள்வோம். ஆனால், நாடாளுமன்றத்தில் பேசும்போது அதற்கென உள்ள விதிகள், கண்ணியத்தை பின்பற்ற வேண்டும்.

இவை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கியமான பகுதிகள். ஆனால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் மனதை அவரது ஆதரவாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதையேதான் ராகுல் காந்தி அவையில் பேசுகிறார். பாஜ எதிர்க்கட்சியாக இருந்தபோது, சில தரங்களை பின்பற்றி, பலமான போராட்டங்களை நடத்தியது. ஆனாலும் வரம்புகளை மீறவில்லை. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஒருவர் தன்னைத்தானே தகுந்த முறையில் வௌிப்படுத்தி கொள்ள வேண்டும். உடை அணிவதும் அதன் ஒரு பகுதியாகும். அவருக்கு(ராகுல் காந்திக்கு) விதிகள் மற்றும் அவை நடைமுறைகளை புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது.

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படும் முன்பாக, தளர்வான சட்டை, செருப்புகளை அணிந்து வந்தார். அவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவர் மிகவும் கண்ணியமாக வர தொடங்கினார். நாம் அந்த நபரை மதிக்காமல் இருக்கலாம். ஆனால், அந்த நாற்காலியை மதிக்க வேண்டும். சிறந்த ஆடை அணிதல் என்பது சிறந்த முறையில் தன்னை நடத்துவதற்கு சமம். நான் டி-ஷர்ட்டை எதிர்க்கவில்லை. ஆனால் அது அவைக்கு வரும்போது அணிவதில் அழகாக இல்லை. மக்களவையில் ராகுல் காந்தி விவகாரங்களை அணுகும் முறை மற்றும் பேசும் விதத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கான தீவிரம் எதுவுமில்லை. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதே எதிர்க்கட்சி தலைவரின் முக்கிய பங்கு. ஆனால் அது ராகுலிடம் குறைவாகவே உள்ளது. அவருடன் ஒப்பிடும்போது, அவரது சகோதரி பிரியங்கா காந்திக்கு அரசியல் பற்றிய சிறந்த புரிதலும், மக்களுடன் கலந்து பழகும் திறனும் அதிகமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

Tags : Priyanka ,Rahul Gandhi ,Union Minister ,Rijiju ,NEW DELHI ,UNION ,MINISTER ,PRIYANKA GANDHI ,Minister of Parliamentary Affairs ,Kiran Rijiju ,Delhi ,
× RELATED சட்டவிரோத வீட்டுமனை ஒதுக்கீடு...