×

2024-25 ம் ஆண்டில் பாஜ நன்கொடை வசூல் ரூ.6074 கோடி: மொத்த தேசிய கட்சிகளை விட 10 மடங்கு அதிகம்

புதுடெல்லி: கடந்த 2024-25 நிதியாண்டில் பாஜ கட்சி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.6074.015 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது மற்ற தேசிய கட்சிகள் பெற்றதை விட 10 மடங்கு அதிகமாகும். இது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடந்த 2024-25ம் ஆண்டில்,தேசிய கட்சிகளால் அறிவிக்கப்பட்ட ரூ.20,000க்கும் மேலான நன்கொடைகள் 11,343 பங்களிப்புகள் மூலம் ரூ.6,648.563 கோடி வந்துள்ளன. இதில், பாஜ மட்டும் ரூ.6,074.015 கோடியை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ரூ.517.394 கோடியை பெற்றுள்ளது.

பாஜ அறிவித்த நன்கொடைகள், அதே காலகட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி , மார்க்சிஸ்ட் மற்றும் தேசிய மக்கள் கட்சி(என்பிஇபி) ஆகியவற்றின் மொத்த தொகையை விட பத்து மடங்குக்கும் அதிகமாகும். பகுஜன் சமாஜ் கட்சி, ரூ.20,000-க்கு மேல் எந்த நன்கொடையும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது. 2023-24 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2024-25 நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கான ஒட்டுமொத்த நன்கொடைகள் ரூ.4,104.285 கோடி அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ.2,243.947 கோடியாக இருந்த பாஜவின் வசூல் மட்டும், இந்த நிதியாண்டில் 171 சதவீதம் உயர்ந்துள்ளது. காங்கிரசுக்கான நன்கொடைகள் 2023-24 நிதியாண்டில் ரூ.281.48 கோடியிலிருந்து 2024-25 நிதியாண்டில் ரூ.517.394 கோடியாக அதிகரித்துள்ளன.

மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை, ஆம் ஆத்மிக்கு ரூ. 27.044 கோடி கிடைத்தது. தேசிய மக்கள் கட்சிக்கு(என்பிஇபி) ரூ. 1.943 கோடி கிடைத்தது. நிதி திரட்டலில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளன. 3,244 நன்கொடைகள் மூலம் கிடைத்த கார்ப்ரேட் நன்கொடைகள், மொத்த பங்களிப்புகளில் 92.18 சதவீதமான ரூ. 6128.787 கோடி வழங்கியுள்ளன. தனிநபர் நன்கொடையாளர்கள் ரூ.505.66 கோடியை வழங்கினர். கார்ப்ரேட் நன்கொடைகள் மூலம் பாஜ கட்சி ரூ. 5,717.167 கோடியைப் பெற்றது. இது மற்ற அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து பெற்ற ரூ. 411.62 கோடியை விட 13 மடங்கு அதிகம்.

மேலும், தனிநபர் நன்கொடையாளர்களிடமிருந்து அக்கட்சி ரூ. 345.94 கோடியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி, கார்ப்ரேட் நன்கொடைகள் மூலம் ரூ. 383.86 கோடியையும், தனிநபர் நன்கொடையாளர்களிடமிருந்து ரூ. 132.39 கோடியையும் பெற்றது. புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை,பாஜ, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இணைந்து மொத்தம் ரூ. 2413.465 கோடியை வழங்கியது. இதில், ரூ. 2180.7119 கோடி பாஜவுக்கும் (கட்சி பெற்ற மொத்த நிதியில் 35.90 சதவீதம்), ரூ.216.335 கோடி காங்கிரசுக்கும் (கட்சி பெற்ற மொத்த நிதியில் 41.81 சதவீதம்) மற்றும் ரூ. 16.4178 கோடி ஆம் ஆத்மி கட்சிக்கும் சென்றது.

Tags : BJP ,New Delhi ,Association for Democratic Reforms ,ADR ,
× RELATED அவைக்கு டி சர்ட் அணிந்து வரும்...