புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதனால் எல்பிஜி மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நயாரா என்ற தனியார் நிறுவனம் திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வாடினார் பகுதியில் இந்தியாவின் 2வது பெரிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 6967க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளை நயாரா நிறுவனம் கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது எரிபொருள் கொள்முதல் மற்றும் செயல்பாட்டுச் செலவுகளில் ஏற்பட்ட உயர்வின் ஒரு பகுதியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடிவு செய்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் உள்ளூர் வரிகளாக வாட் போன்ற காரணிகளை பொறுத்து இந்த விலையானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்று கூறப்படுகின்றது. இது தொடர்பாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்கள் இதுவரை விலையை உயர்த்தவில்லை.
