×

பாலியல் வழக்கில் தலைமறைவான ஆம் ஆத்மி எம்எல்ஏ 6 மாதத்துக்கு பின் கைது

பாட்டியாலா: பாலியல் பலாத்காரம் வழக்கில் சிக்கி, கடந்த 6 மாதங்களுக்கும் மேல் தலைமறைவாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப், பாட்டியாலா மாவட்டத்தின் சனூர் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. திருமணம் செய்து வைப்பதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜிரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அந்த எம்எல்ஏ மீது கடந்த செப்டம்பர் மாதம் பலாத்காரம், மோசடி மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, பஞ்சாப் போலீசார் அரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிலிருந்த அவரைக் கைது செய்ய ஒரு போலீஸ் படையை அனுப்பியது. அவரது ஆதரவாளர்கள் போலீஸ் மீது கற்களை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்கிய நிலையில், பதன்மஜ்ரா அங்கிருந்து தப்பிவிட்டார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பாட்டியாலா போலீசார் பல்வேறு குழுக்கள் அமைத்து அவரை தேடி வந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் குவாலியர் அருகே உள்ள ஷிவ்புரியில் பதுங்கி இருப்பதாக பஞ்சாப் போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், ஹர்மீத் சிங்கை நேற்று முன்தினம் கைது செய்து பாட்டியாலா அழைத்து வந்தனர். இதுகுறித்து பாட்டியாலா எஸ்பி வருண் சர்மா, “தலைமறைவாக இருந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் ” என்றார்.

Tags : AAP MLA ,Patiala ,Harmeet Singh Pathanmajra ,Sanur ,Patiala district ,Punjab ,Harmeet Singh… ,
× RELATED ஒரு மாதத்திற்கான சமையல் எரிவாயு 60...