*விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு
ராமநாதபுரம் : அரசு முன்னெடுப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரை நு£ற்றாண்டு காலமாக முற்றிலும் அழிக்க முடியாத, விவசாயத்திற்கு தீங்கு விளைவித்து வருகின்ற மாவட்டத்தின் நிலப்பரப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சீமை கருவேல மரங்களை அழித்து செழுமை கருவூலம் அமைய உள்ளதை விவசாயிகள்,இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி எனப்படும் பருவமழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை பிரதான மழையாக உள்ளது. இதனை நம்பி நெல், மிளகாய், பருத்தி,சி றுதானியங்கள், எண்ணெய் வித்துகள் பயிரிடப்படுகிறது.
மாவட்டத்தில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நெல், 50 ஆயிரம் ஏக்கர் மிளகாய், 30ஆயிரம் ஏக்கர் பருத்தி, 25 ஆயிரம் ஏக்கர் சிறுதானியங்கள், 2 ஆயிரம் ஏக்கர் பயறுவகை, 10ஆயிரம் ஏக்கர் எண்ணெய் வித்துகள் என காலத்திற்கேற்ப விவசாயம் செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் 1,731 பாசன கண்மாய் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. நீர்நிலைகளில் சேமிக்கப்பட்ட தண்ணீரை கொண்டு இறைவை விவசாயம் செய்யப்பட்டது. இதனால் சுமார் 58ஆயிரத்து 322 ஹெக்டேரில் பாசனம் விவசாயம் செய்யப்பட்டது. ஆனால் பொதுப்பணித் துறை கண்மாய்கள், பெரிய கிராமங்களில் உள்ள சில யூனியன் கண்மாய்கள் தவிர, மற்ற நீர் ஆதாரங்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக போதிய பராமரிப்பின்றி கிடக்கிறது.
இதனால் பருவமழையை மட்டுமே நம்பி தற்போது விவசாயம் செய்யப்படுகிறது. பருவ மழை கைவிட்டால், விவசாயம் பொய்த்து விடும் நிலை தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பே ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் ஆட்சி காலத்தில் சுமார் 2ஆயிரம் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அப்போது பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தின் வழியாக வரத்து ஆறு, கால்வாய்களும் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர் வறட்சியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் தஞ்சாவூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு விவசாய பணி மட்டுமே தெரிந்ததால் பிழைப்பு தேடி சென்றனர். இதனால் 1950களில் அப்போதைய அரசு மாவட்டத்தில் நச்சுதன்மை அறியாத சீமை கருவேலமரத்தை விதைத்தது.இந்த மரம் நன்றாக வளர்ந்தது.
அதை வெட்டுதல், கரிமூட்டம் போடுதல், கரியாக்கி விற்பது, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, செங்கல், சுண்ணாம்பு சூலை, சிவகாசி பட்டாசு தொழிற்சாலை, நீராவியால் இயங்கும் தொழிற்சாலை, மின் உற்பத்தி நிலையம், கொள்ளம்பட்டரை போன்றவற்றிற்கு அனுப்புவது உள்ளிட்டவற்றால் கூலியும், வேலையும் கிடைத்தால் பிழைப்பு தேடி சென்றவர்கள் மீண்டும் சொந்த கிராமங்களுக்கு திரும்பு அளவிற்கு சீமை கருவேல மரம் அப்போது உதவி செய்தது.
ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் உதவிய மரம், தற்போது விவசாயம், நிலத்தடி நீர்மட்டம், பாரம்பரியமிக்க மண்ணிற்கு எதிராக வளர்ந்து நிற்கிறது.இந்த மரம் நிற்கும் இடத்தில் மற்ற தாவரங்கள் வளராது, அல்லினோபதி எனும் வேதி பொருள் அதிகமாக இருப்பதால் கண்மாய், வரத்து கால்வாய் போன்றவற்றில் வளர்ந்து, நீர் பரப்பு குறைந்து விட்டது.
இந்த மரத்தின் பிடியில் வீணாகும் விவசாய நிலங்களின் சாகுபடி பரப்பளவு ஆண்டுக்கு 2.5 சதவீதம் குறைந்து வருகிறது. ஆண்டுக்காண்டு விவசாயம் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருவதாக வேளாண் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நிலப்பரப்பில் 2.50 லட்சம் ஏக்கரில், அதாவது தற்போது விவசாயம் செய்யப்படும் 2.50 லட்சம் ஏக்கருக்கு சமமாக பரப்பில் இந்த மரம் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. மண்ணை மலட்டாக்கிய இந்த மரத்தின் காய்களை திண்ணும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் மலட்டாக்கியது. ஒரு காலக்கட்டத்தில் வருவாயை தந்தாலும் கூட, அதுவே தற்போது விரோதமாக வந்து நிற்கிறது.
தற்போதைய தமிழக அரசின் சிறப்பு திட்டங்களால் ஏழை,எளிய மக்கள்,வறுமைகோட்டிற்கு கீழ்நிலையிலிருந்து சற்று மேல்நோக்கி வருகின்றனர்.சொல்லப்போனால் நூறு நாள் வேலை, மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை போன்ற உதவித்தொகை திட்டங்கள் ஒரு ஏழை குடும்பத்திற்கு வருவாயை ஈட்டி தருவதில் கைகொடுக்கும் திட்டங்களாக உள்ளது.
இதுபோன்ற திட்டங்களால் விவசாயிகள், விவசாயத்திற்கு பாதகத்தை விளைவித்து, நிலத்திற்கும்,கால்நடைகளுக்கும் பாதிப்பை தந்துகொண்டிருக்கும் சீமை கருவேல மரத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொதுநல வழக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் தமிழக அரசு சார்பிலும் அரசு வழக்கறிஞர்கள் சீமை மரத்தை அகற்றக்கோரியும், அதற்கு தேவையான உதவிகளை அரசு செய்து தரும் எனக்கூறி பரிந்துரை செய்தனர். இதனையடுத்து ஐகோர்ட் மதுரை கிளை சில உத்தரவுகளை பிறப்பித்தது.
அதன்படி சீமை கருவேல மரங்களை இயந்திரங்களை கொண்டு வேறோடு பிடிங்கி. உள்ளுர் இன தாவரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். இத்திட்டத்திற்கு செழுமை கருவூலம் என பெயரிட வேண்டும், சீமை கருவேல மரத்தை அகற்ற, புதிய மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்டவற்றிற்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் கலெக்டருக்கு வழங்கப்படுகிறது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது.
தற்போது சட்டமன்ற தேர்தல் பணிகள் நடந்து வருவதால், இரண்டு மாதத்திற்கு பிறகு மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி சூடுபிடிக்கும். அதன் பிறகு மழை காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதிய மரக்கன்றுகள் நடும் பணி துவங்கும் என தெரிகிறது. இதனால் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
அரசு வகுத்த திட்டம்
தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் நோக்கத்தில் சாகுபடி பரப்பை உயர்த்தி, விவசாயிகளின் வருவாயை பெருக்க கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், கலைஞரின் தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் பயனுள்ளதாகும்.
இதன் கீழ் தரிசாக விடப்பட்ட நிலங்களில் வளர்ந்து இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றி,பாசன வசதி, இடு பொருள், நிதி உதவி,மானிய திட்டங்களை அரசு வழங்கியதால் மாவட்டத்தில் சுமார் 25ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள், சாகுபடி நிலமாக மாறியுள்ளது. இதில் மண்ணிற்கேற்ற வகையில் பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது.
மானியத்திட்டத்தில் கரிபிரித்தல் மையம்…
சீமை கருவேலம் மரக்கரி பயன்பாட்டிற்கு முக்கியமாக பயன்பட்டு வருகிறது. தூத்துக்குடி உள்ளிட்ட வெளிமாவட்ட பகுதியிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் செங்கல் சூளை, மாடர்ன் ரைஸ்மில், தொழிற்சாலைகள், சுண்ணாம்பு சூளை, சிவகாசி பட்டாசு தொழிற்சாலை, நீராவியால் இயங்கும் தொழிற்சாலை, கொள்ளம்பட்டரை போன்றவற்றின் பயன்பாட்டிற்கும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சீமை கருவேல மரத்துண்டுகள் மற்றும் சுடப்பட்ட கரித்துண்டுகளை வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம்.
மாவட்ட தொழில் மையம் சார்பில் கரி உற்பத்தி, தரம் பிரித்தல், அரைத்து தூளாக்குதல், பாக்கெட் போடுதல், விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்தல் வரையிலான தொழிற்கூடம் அமைப்பதற்கு 25% முதல் 35% வரை மானியம் வழங்கி ரூ.20 லட்சம் முதல் 1 கோடி வரையிலும் வங்கி கடனுதவியும் செய்து வருவதால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உருவாகி, அப்பகுதியினருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. எனவே சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியால் கரி மூட்டம் அமைத்தல் மற்றும் கரி பிரித்தல் தொழிற்கூடம் வளர்ச்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
