சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை 76 சதவீதமாகவும், மாணவர்கள் சேர்க்கை 71 சதவீதமாகவும் உயர்ந்து உள்ளதாக ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே என் வாழ்வின் ஒரே குறிக்கோள் என்று கூறி அந்த குறிக்கோளை அடைந்திட ஓய்வின்றி உழைத்து வருகிறார். கல்விச் செலவுகளும், மருத்துவச் செலவுகளும் ஒவ்வொரு குடும்பத்தில் முன்னேற்றத்திலும், தடைக்கற்களை எழுப்புகின்றன. அதிலும் ஏழைக் குடும்பங்களில் இது மிகவும் அதிகமாகும். சமத்துவமும் சமதர்மமும் செழித்தால்தான் தமிழ்நாடு தழைக்கும். பொருளாதார சமத்துவம் சிறக்கும் எனும் அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஏழை எளியோருக்கு உதவும் திட்டங்களுக்கே முன்னுரிமை தந்தார்.
விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் முதலிய திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி செயல்படுத்தியது. இதனால் மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிமுக ஆட்சியை விட அதிகரித்து தமிழ்நாடு சாதனைகள் படைத்துள்ளது. 2020-21 அதிமுக ஆட்சியில் மேல்நிலைக்கல்வி மாணவிகள் சேர்க்கை 49.8 சதவீதம். இன்று திராவிட மாடல் ஆட்சியில் 2024-25ம் ஆண்டு கணக்கின்படி அது 76 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல 2020-21 அதிமுக ஆட்சியில் மேல்நிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கை 46.6 சதவீதம் இன்று திராவிட மாடல் ஆட்சியில் 2024-25ம் ஆண்டு கணக்கின்படி அது 71 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மாணவிகள் 24.7 சதவீதம். மாணவர்கள் 24 சதவீதம். மராட்டிய மாநிலத்தில் மாணவிகள் 47.1 சதவீதம், மாணவர்கள் 46.7 சதவீதம். உத்தரபிரதேசத்தில் மாணவிகள் 31.7 சதவீதம், மாணவர்கள் 31.1 சதவீதம்.
ராஜஸ்தானில் மாணவிகள் 33.6 சதவீதம், மாணவர்கள் 34.2 சதவீதம். மத்திய பிரதேசத்தில் மாணவிகள் 24.9 சதவீதம், மாணவர்கள் 24.7 சதவீதம். இப்படி பா.ஜ ஆளும் எல்லா மாநிலங்களும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை நெருங்கக்கூட முடியவில்லை. திராவிட மாடல் ஆட்சியால் விளைந்த இந்த சாதனைக்கு ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை சான்று கூறியுள்ளது. தமிழ்நாடு பெற்றுள்ள இந்த சாதனையை தொட்டுக்கூட பார்க்க முடியாத அளவில் இந்தியாவில் பாஜ ஆளும் இதர மாநிலங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது. இந்த சாதனை எப்படி நிகழ்ந்தது? திராவிட மாடல் அரசு 2021ல் ஆட்சி பொறுப்பேற்றப்பின் செயல்படுத்திய விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் முதலிய புதுமையான திட்டங்களால் தான் இந்த புரட்சி மலர் பூத்துள்ளது என்பதே உண்மையாகும்.
