×

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் தமிழகம், புதுச்சேரியில் தேஜ கூட்டணி வெற்றிபெறும்: பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் பேட்டி

 

சென்னை: பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் தமிழகம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என்று தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக – பாஜ கூட்டணி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல், நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: விவசாயிகள், மீனவர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எங்களுடைய என்டிஏ கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கும் நோக்கத்தில், பல புதிய நிறுவனங்கள், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏழைகளுக்கு தரமான கல்வி மருத்துவம் மற்றும் வசிப்பதற்கு வீடுகள் உறுதி செய்யப்படும். தமிழ் மொழி, பண்பாடு மற்றும் தமிழர்களின் பெருமையை பாதுகாக்க என்டிஏ கூட்டணி உறுதியாக நிலைப்பாடை எடுத்துள்ளது. எங்களுடைய என்டிஏ கூட்டணி ஒற்றுமையாக, ஒரு குடும்பம் போல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில், என்டிஏ கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவாக இருக்கிறது. பிரதமர் மோடி 25 ஆண்டு கால முதல்வர் மற்றும் பிரதமர் என சிறப்பான ஆட்சியை நாட்டிற்கு கொடுத்துள்ளார். இந்தியாவின் நீண்ட கால அரசு தலைவராக, மோடி சாதனை படைத்துள்ளார். அவரது தொலைநோக்கு பார்வையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Teja alliance ,Tamil Nadu ,Puducherry ,Modi ,BJP ,Piyush Goyal ,Chennai ,National Democratic Alliance ,Tamil Nadu assembly elections ,AIADMK ,BJP alliance… ,
× RELATED தஞ்சை பிரசாரத்தின்போது விபத்தில்...