×

சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினருடன் நேர்காணல் முடிந்தது: இந்த வாரத்தில் வேட்பாளர்களை அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டம்

 

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த திமுகவினருடனான நேர்காணல் நேற்றுடன் முடிந்தது. இந்த வாரத்தில் வேட்பாளர்களை அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. முதல் நாளான கடந்த 17ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து 18ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான நேர்காணல் தொடங்கியது. 18ம் தேதி மாவட்டங்களுக்கான நேர்காணலும், 19ம் தேதி கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கான நேர்காணலும் நடந்தது. 20ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்பட 41 மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, நேர்காணல் நடந்தது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். இந்த நேர்காணலில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த உதயநிதி ஸ்டாலினிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?. அந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து என்னென்ன திட்டங்களை செய்துள்ளீர்கள்’’ என்று பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டார். இந்த நேர்காணலில் கலந்துகொண்டு வெளியே வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையேயான வித்தியாசம் பற்றி கேட்டார்கள். அதற்கு பதிலளித்தேன். தொகுதி மக்களுக்காக என்ன செய்துள்ளீர்கள் என கேட்டார்கள். விரிவாக பதிலளித்தேன். பிறகு, போய் வாருங்கள். யார் வேட்பாளர் என யோசித்து முடிவு அறிவிப்பதாக சொல்லி அனுப்பி விட்டார்கள்’’ என உதயநிதி கூறினார்.

யார் வேட்பாளர் என சொல்லவில்லையா என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அது எப்படி கூறுவார்கள்; தலைவர்தான் அறிவிப்பார்’’ என நகைச்சுவையாக பதில் அளித்தார். இந்நிலையில் நேர்காணலின் இறுதி நாளான நேற்று காலை திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்துக்கான நேர்காணல் நடந்தது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர். போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களை தொகுதி வாரியாக அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார்.
தொடர்ந்து, மாலையில் புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்துக்கான நேர்காணல் நடந்தது. நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக, மீதியுள்ள தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பதை அறிவிப்பார். அனேகமாக இந்த வாரத்திற்குள் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags : DMK ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,Puducherry ,Chennai… ,
× RELATED தஞ்சை பிரசாரத்தின்போது விபத்தில்...