திருச்சி: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் நேற்று நள்ளிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மயிலாடுதுறையில் நள்ளிரவு 1 மணி நேரம் பலத்த மழை பொழிந்தது. தஞ்சை மாவட்டம் பூதலூர், சித்திரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. நாகையில் இன்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வேதாரண்யம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. புதுக்கோட்டையில் நேற்று காலை சிறிது நேரம் மழை பெய்தது. பின்னர் வெயில் அடித்தது. இந்நிலையில் 2வது நாளாக இன்று அதிகாலை 5 மணிக்கு பலத்த மழை பொழிந்தது. விராலிமலை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகாலை திடீரென்று கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கரூர் மாவட்டம் கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சார்புரம், நல்லூர், கொடக்கார மூலை, திருமுல்லைவாசல், வடகால் வேட்டங்குடி, கூழையாறு, புத்தூர், ஒதவந்தான்குடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் நேற்று அதிகாலையிலிருந்து பரவலாக மிதமான மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கோவிலூர், தம்பிக்கோட்டை, ஆலங்காடு, உப்பூர், உதயமார்த்தாண்டபுரம், பின்னத்தூர், எடையூர், இடும்பாவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு பல இடங்களில் மழை பொழிந்தது.
திருச்சியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், சமயபுரம் பகுதிகளிலும் அதிகாலை மழை பெய்தது. டெல்டாவில் சம்பா அறுவடை தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. மழையால் அறுவடை செய்த வயல்களில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகள் நனைந்தது. டெல்டா மாவட்டங்களில் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
