×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: சுவரோவியங்கள் மூலம் அசத்தும் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள்

 

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை மாணவ, மாணவிகள் சுவற்றில் வரையும் பணியில் ஈடுபட்டு அசத்தி வருகின்றனர். திருப்பூரில் சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து பொதுச் சுவர்களில் வண்ணமயமான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தி வருகின்றனர். சமீபகாலமாக அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் குறைக்கவும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 மாணவர்கள் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

கல்லூரி சாலையில் உள்ள கல்லூரி சுற்றுப்புறச் சுவர்கள் முழுவதும் போக்குவரத்து விதிகள், தலைக்கவசம் அணிவதன் அவசியம், கைப்பேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது போன்ற விழிப்புணர்வுச் சித்திரங்களைத் தத்ரூபமாக மாணவ, மாணவிகளே வரைந்துள்ளனர். வெறும் எழுத்துகளாகச் சொல்லாமல், எளிதில் புரியும் வகையிலான ஓவியங்களாக சாலைப் பாதுகாப்பு விதிகளை விளக்குவது அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சமூக மாற்றத்திற்காக மாணவர்கள் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பைச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags : Tiruppur ,Chikanna Government Arts College ,National Welfare Project ,
× RELATED விளாத்திகுளம் மாணவி கொலை வழக்குக்...