×

திருப்புத்தூர் அருகே ரேஷன் அரிசி கடத்தல் வாகனம் கவிழ்ந்து விபத்து; அதிகாரிகள் விசாரணை

 

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே, ரேஷன் அரிசி கடத்திச்சென்ற வாகனம் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தொடர்புடையோர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, வாணியங்காடு பகுதியில் காரைக்குடி-மேலூர் சாலையில் நேற்று மதியம் சரக்கு வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென அந்த வாகனத்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்து சிதறின. இதையடுத்து சரக்கு வாகன டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் திருப்புத்தூர் தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் திருக்கோஷ்டியூர் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் சரக்கு வாகனத்தில் 50க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமார் 2.5 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட குடிமைப் பொருள் பறக்கும் படை தாசில்தார் முபாரக் உசேன், துணை தாசில்தார் அறிவுச்சுடர் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

அரிசி மூட்டைகளை கைப்பற்றி திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், வாகனத்தை கைப்பற்றி, ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடையோர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruputhur ,Karaikudi-Melur road ,Vaniyankad ,Sivaganga district ,
× RELATED தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு