ஈரோடு,மார்ச்9: ஈரோடு டவுன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சிவகிரி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாண்டாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பார் ஒன்றின் எதிரில் உள்ள பொதுக்கழிப்பிடத்தின் அருகில், அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட வள்ளியம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி (50) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 27 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
