×

தேவாலா கைதகொல்லி பகுதியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

பந்தலூர், மார்ச் 3: பந்தலூர் அருகே தேவாலா கைதகொல்லி பகுதியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா கைதகொல்லி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கிணற்று தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிணறு கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இன்றி காணப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோடைகாலத்திலும் சீரான குடிநீர் கிடைக்க வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று அப்பகுதி மக்கள் கூடலூரில் இருந்து பந்தலூர் செல்லும் நெடுஞ்சாலை கைதகொல்லி பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் நெல்லியாளம் நகராட்சி பணி மேற்பார்வையாளர் பிரதீப் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Devala Kaithakolli ,Pandalur ,Nellialam Municipality ,Nilgiris district ,
× RELATED வாளையார் பகுதியில் வன விலங்குகள்...