×

நாடாளுமன்ற தேர்தலில் அபாரம்; நேபாள பிரதமராகிறார் பாப் பாடகர் பாலென் ஷா: புதிய வரலாறு படைத்தது ‘ஜென் ஜி’ தலைமுறை

 

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி மிகப்பெரிய வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. நேபாளத்தில் கடந்த 2025ம் ஆண்டில் ‘ஜென் ஜி’ என்றழைக்கப்படும் இளைய தலைமுறையினர் நடத்திய பிரம்மாண்ட போராட்டத்தைத் தொடர்ந்து முந்தைய அரசு கவிழ்ந்தது. அந்தப் போராட்டத்தின் நீட்சியாகவே தற்போது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரபி லாம்ச்சானே தலைமையிலான ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி (ஆர்எஸ்பி) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

மொத்தம் உள்ள 275 இடங்களில், தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 138 இடங்களை அந்த கட்சி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டில் அமையவுள்ள முதல் பெரும்பான்மை அரசு இதுவாகும். காத்மாண்டு மாநகராட்சி மேயர் பதவியை கடந்த ஜனவரி மாதத்தில் ராஜினாமா செய்த பாப் பாடகரான பாலென் ஷா (36), ஆர்எஸ்பி கட்சியில் இணைந்தார். தற்போது ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்ட அவர், மூத்த தலைவர் கே.பி.சர்மா ஓலியை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதன் மூலம் நேபாளத்தின் மிக இளைய வயதுடைய பிரதமர் என்ற பெருமையை பாலென் ஷா பெற உள்ளார். இன்றைய நிலவரப்படி, நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 165 இடங்களில் 90 முதல் 110 இடங்களில் ஆர்எஸ்பி முன்னிலை வகிக்கிறது. விகிதாச்சார வாக்கு எண்ணிக்கையில் அந்த கட்சி 56 முதல் 59 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த 1991ம் ஆண்டுக்கு பிறகு இந்தத் தேர்தலில் தான் 58.7 சதவீதம் என்ற மிகக் குறைந்த வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

பழைய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வாக்களிக்க வராத நிலையில், இளைஞர்களின் வாக்குகள் ஆர்எஸ்பி கட்சிக்குச் சாதகமாக மாறியுள்ளன. தேர்தல் வெற்றி குறித்து ஆர்எஸ்பி நிர்வாகிகள் கூறுகையில், ‘மக்களின் இந்த எழுச்சி நேபாள அரசியலில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது. பழைய அரசியல் வாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இளைஞர்களின் கையில் அதிகாரம் கிடைத்துள்
ளது’ என்று தெரிவித்தனர்.

Tags : Balen Shah ,Nepal ,Zen Ji ,Kathmandu ,Rashtriya Swatantra Party ,
× RELATED அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வு!!