நியூயார்க்: முன்னாள் அதிபர் மகனின் விருப்பத்திற்காக நடிகை மர்லின் மன்றோவாக மாறியதாக ஹாலிவுட் நடிகை தெரிவித்தார். கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ‘ஜார்ஜ்’ பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக ஹாலிவுட் நடிகை டூரூ பேரிமோர் (21), மர்லின் மன்றோவை பிரதிபலிக்கும் வகையில் பிளாட்டினம் பொன்னிற விக் மற்றும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்தார். இந்த துணிச்சலான முடிவுக்காக அப்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை தற்போது டூரூ பேரிமோர் பகிர்ந்துள்ளார்.
தற்போது 51 வயதாகும் டூரூ பேரிமோர் கூறுகையில், ‘நான் வீட்டில் படுக்கையில் இருந்தபோது அமெரிக்காவின் மறைந்த முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடியின் மகனான ஜான் எப் கென்னடி ஜூனியர் எனக்கு போன் செய்தார். அப்போது அவரும் அவரது மனைவி கரோலின் பெசெட் கென்னடியும் மிகுந்த புகழின் உச்சியில் இருந்தனர். அவர் என்னிடம் பேசும்போது, ‘எனது பத்திரிகைக்காக நீங்கள் மர்லின் மன்றோ போல வேடமிட்டு அட்டைப்படத்திற்கு போஸ் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டார்.
அவரது குடும்ப ரகசியம் தொடர்பான விஷயம் என்பதால் நான் சற்று தயங்கினேன். ஆனால் அவர் மிகவும் நம்பிக்கையுடன் என்னை அணுகியதால் நானும் சம்மதித்தேன்’ என்றார். இந்த அட்டைப்படத்திற்காக முதலில் பாப் பாடகி மடோனாவை ஜான் எப் கென்னடி ஜூனியர் அணுகியதாகவும், ஆனால் அவர் அந்த வாய்ப்பை மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது தந்தையின் ரகசிய உறவு குறித்த வதந்திகளை ஒரு புன்னகையுடன் கையாண்ட கென்னடி ஜூனியர், அந்த புகைப்படங்கள் மிகவும் கண்ணியமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இன்றும் அது ஊடகத்துறையில் ஒரு மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது.
