அமெரிக்கா: பிரபல அழகு கலை நிபுணர் மிக்கேலா நோகுவேரா தனது கணவர் கோடி ஹாக்கனை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அழகு கலை நிபுணர் மிக்கேலா நோகுவேரா மற்றும் கோடி ஹாக்கன் ஆகிய இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் கோலாகலமாக திருமணம் நடந்தது. கடந்த 2025ம் ஆண்டு இவர்கள் மசாசூசெட்ஸ் பகுதியில் 43.5 லட்சம் டாலர் மதிப்பில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி குடியேறினர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இவர்களது திருமண வாழ்க்கையில் கசப்புணர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. தற்போது மிக்கேலா நோகுவேரா தனது விவாகரத்து முடிவை முறைப்படி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘நாங்கள் இருவரும் பிரிந்து செல்வது என 2025ம் ஆண்டு இறுதியிலேயே முடிவு செய்துவிட்டோம். இது மிகவும் கடினமான முடிவு என்றாலும், இருவரின் நலன் கருதி எடுக்கப்பட்டது. எங்கள் பிரிவுக்கு கோடி ஹாக்கனின் போதைப்பொருள் மீட்பு சிகிச்சைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தயவு செய்து அவரது தனிப்பட்ட பிரச்னைகளை இதனுடன் இணைக்க வேண்டாம்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘நாங்கள் பிரிந்தாலும் இப்போதும் தினசரி போனில் பேசிக்கொள்கிறோம். அவர் அவ்வப்போது வீட்டிற்கு வந்து எங்களது நாய்களை பார்த்துச் செல்வார். இருவரும் அமர்ந்து ஒன்றாக இரவு உணவு சாப்பிடும் அளவிற்கு இப்போதும் நட்பு நீடிக்கிறது. எங்கள் பிரிவிற்கான உண்மையான காரணம் எங்களுக்கு மட்டுமே தெரியும்.
எனவே சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
