×

மகனுக்கு ஆப்பு வைக்க ராமதாஸ் கடைசி அஸ்திரம்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் செல்வாக்குடன் இருந்த பாமக, தற்போது இரு அணிகளாக உடைந்து கிடக்கிறது. ஏற்கனவே தொடர் தோல்விகளால் கட்சி அங்கீகாரத்தை இழந்த நிலையில் அதை மீட்டெடுக்கவே கடந்த 2 வருடங்களாக ராமதாஸ் முனைப்பு காட்டி வருகிறார். ஆனால் அவை நேர் எதிராக முடிய, கட்சி விசுவாசிகள் விரக்தியில் உள்ளனர். இதனிடையே மகன் அன்புமணியோ தனக்கான தேர்தல் கூட்டணியை முந்திக் கொண்டு அதிமுகவுடன் முடிக்க அவருக்கு ராஜ்யசபா சீட்டு பரிசாக கிடைத்துள்ளது.

இதற்கான தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்த நிலையில், கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தொடர்ந்து திணறி வரும் தந்தை ராமதாசோ, கடைசி நேர திருப்பமாக தனது உதவியாளர் சுவாமிநாதனை ராஜ்யசபா வேட்பாளராக மனு போட வைத்தார். 10 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத மனு தள்ளுபடியாகும் என தெரிந்தும், அதை போட்டிருப்பதன்மூலம், அதிமுகவுடன் எப்படியாவது கூட்டணி அமைத்துவிட வேண்டுமென்ற ராமதாஸின் அதீத விருப்பத்ைதயே இது வெளிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

கூட்டணி தொடர்பான நிர்வாகிகளின் அழுத்தத்தால், நெருக்கடியில் உள்ள ராமதாஸ் நேற்று முன்தினம் திடீரென 35 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அங்கு விருப்பமனு அளித்திருந்த மாவட்ட நிர்வாகிகளை அவசரமாக தைலாபுரம் வரவழைத்து ஆலோசித்தார். அப்போது, தவெகவுடன் பயணிக்க பலர் விருப்பம் தெரிவித்த நிலையில், அங்கு நமக்கான கதவு திறக்கப்படாததை ராமதாஸ் சூசகமாக கூறிவிட்டதாக தகவல்கள் கசிகின்றன.

தலித் ஆதரவு வாக்கு வங்கிகளை கணிசமாக வைத்துள்ள தவெக, ராமதாசுடன் இணைந்தால் அந்த வாக்குகள் பாதிக்கப்படும் என கருதுவதாக தெரிகிறது. இதனால் கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டாமல் கதவை மூடிவிட்ட நிலையில், நமக்கான ஒரே வாய்ப்பு இனி அதிமுக மட்டுமே என்ற முடிவுக்கு ராமதாஸ் மீண்டும் வந்ததாலே, உண்மையான பாமகவான தனக்குதான் இறுதியில் கட்சி அங்கீகாரத்தை நீதிமன்றம் வழங்கும் என்பதை அதிமுகவுக்கு வெளிப்படுத்தி அன்புமணிக்கு செக் வைக்கும் வகையிலே கடைசிநேரத்தில் சுவாமிநாதனை களமிறக்கினாராம்.

தற்போது அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்ததால் ராமதாஸ் கடும் அப்செட்டில் உள்ளாராம். இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பாமக துவங்கியதில் இருந்து திமுக, அதிமுக மற்றும் தனித்தும் போட்டியிட்டு பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதை உறுதி செய்து வைத்திருந்தார் ராமதாஸ். பாமக தலைவராக மகனை நியமனம் செய்ததிலிருந்து கட்சியின் அங்கீகாரமும் போச்சு, கட்சியும் தன்னிடம் இருந்து போச்சு என புலம்பி வருகிறார்.

திமுக கூட்டணியில் சேரலாம் என்றால் சின்னம் யாருக்கு என்ற பிரச்னை இருப்பதால் சிக்கல் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் கணிசமான இடங்களை ஒதுக்கினால் சேர்ந்து செயல்படலாம் என்றால் அன்புமணி, தடுத்து வருகிறார். இதனால் கடும் கோபத்துக்கு சென்ற ராமதாஸ், வட தமிழகத்தில் மகன் மற்றும் அதிமுக நிற்கும் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது’’ என்றனர்.

இதன் காரணமாகவே தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், ‘‘கூட்டணி தொடர்பாக ராமதாஸ் என்ன சொல்கிறாரோ, அதன்படி நடப்போம்’’ என்ற பதிலை மட்டுமே பதிவு செய்துள்ளார். இதனால் தேர்தலில் மகனுக்கு ஆப்பு வைக்க ராமதாஸ் ரெடியாகி வருகிறார் என்பது உறுதியாகி உள்ளது.

Tags : Ramadas ,Bamaka ,Tamil Nadu ,Ramdas ,
× RELATED சொல்லிட்டாங்க…