×

திராவிட மாடல் அரசின் சாதனைகளால் வரும் தேர்தலிலும் திமுக சரித்திரம் படைக்கும்: உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

நெல்லை: பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.3.30 கோடி மதிப்பில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து ரூ.57 கோடி மதிப்பில் 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.18 லட்சம் மதிப்பில் 24 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட ரூ.109.01 கோடி மதிப்பில் 18 ஆயிரத்து 830 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

இந்த அரங்கில் ஆண்களை விட மகளிர் அதிகம் வந்துள்ளீர்கள். இது தமிழ்நாடா, மகளிர் நாடா என கேட்கும் அளவிற்கு மகளிருக்கு ஏராளமான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இங்கு கூடியுள்ள மக்களின் மகிழ்ச்சியே 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாட்சி. கடந்த 2021ல் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்ேபற்ற முதல்வர் மகளிர் விடியல் பயணத்திற்கு தான் முதல் கையெழுத்திட்டார். அதற்கு அடுத்ததாக, தேர்தல் அறிக்கையில் சொல்லாத ஒரு வாக்குறுதி. மகளிர் காலையில் எழுந்து பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுப்பதற்கு சிரமப்படக் கூடாது என்று அரசு பள்ளியில் படிக்கும் 32 லட்சம் குழந்தைகள் பயன் பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை முதல்வர் செயல்படுத்தினார். பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தினார். 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் லேப்டாப் வழங்கியுள்ளார்.

இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தது போன்று கடந்த 3 ஆண்டுகளாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக 1.31 லட்சம் மகளிர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கி வருகிறார். சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று சிலர் சூழ்ச்சி செய்தனர். அதற்காக முதல்வர் 3 மாதங்களுக்கும் சேர்த்து கோடை கால சிறப்பு நிதியாக ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார். கோடை கால சிறப்பு நிதியாக விளிம்பு நிலை மக்கள் 38 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரத்தை முதல்வர் வழங்கினார். கடந்த 5 ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தான் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது. சுய உதவிக்குழு சகோதரிகள் அதிகம் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். நீங்கள் என்ன கேட்டாலும் உடனே நிறைவேற்றித் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு திருவாரூர் சென்ற போது சுயஉதவிக் குழுக்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை ஏற்று, முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். கடந்த ஆண்டு மகளிர் தினத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுய உதவிக் குழுவினர் 100 கிமீ தூரத்திற்கு 25 கிலோ வரை கட்டணமில்லாமல் தங்களது உற்பத்தி பொருட்களை அடையாள அட்டையை காட்டி எடுத்துச் செல்ல முடியும். ஆவின், கோ ஆப்டெக்ஸ் ஆகியவற்றில் உங்களது அடையாள அட்டைக்கு சலுகை உள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் முதல்வர் உங்களுக்கு வழங்கியுள்ள கடன் தொகையாக பார்க்கவில்லை. உங்களது உழைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் தொகையாக நமது அரசும், முதல்வரும் பார்க்கிறார்கள். சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கும், வாழ்க்கைக்கும் முதல்வரும், நானும், எங்களது துறையும் துணை நிற்கும். அரசின் திட்டங்கள் சமுதாயத்தில் எல்லா மக்களுக்கும் சென்றடைந்துள்ளது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல திட்டங்களை முதல்வர் வழங்குவார். எனவே இன்னும் அதிகமாக உங்களுக்காக உழைக்க முதல்வருக்கு நீங்கள் வாய்ப்பு தர வேண்டும். தருவீர்கள். திராவிட மாடல் அரசின் சாதனைகளால் வரும் தேர்தலிலும் திமுக சரித்திரம் படைப்பது உறுதி
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Tags : Dhimuka ,Dravitha ,Udayaniti Stalin ,Nella ,Palayangota State Medical College Ground ,Deputy Chief Assistant Minister ,
× RELATED சொல்லிட்டாங்க…