×

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவராககூட எடப்பாடி வரமுடியாது: செல்வப்பெருந்தகை பேட்டி

மீனம்பாக்கம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தற்போது திமுக கூட்டணி கட்சிகளை தனித்தனியே அழைத்து பேசி, அவரவருக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இதற்கு அடுத்தகட்டமாக, எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு தொகுதி ஒதுக்கீடு செய்யும்போது, எங்கெல்லாம் கடும் போட்டி நிலவுகிறதோ, அத்தொகுதிகளில் நேரடியாக திமுகவே போட்டியிட செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி கண்டுள்ளார்.

இந்த வித்தியாச அனுபவத்தை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த 40 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில் நான் முதன்முறையாக பார்த்து அதிசயித்தேன். அதேபோல், தற்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சியினரிடையே தொகுதி பங்கீடு நல்லபடியாக நடந்து முடியும்.

வரும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்ததும், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக்கூட வருவதற்கு வாய்ப்பு இல்லை. தமிழகம் உள்பட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதேபோல் தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருவார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு மகிழ்ச்சியானதாக இல்லை. எனினும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்பது கிரிஷ் சோடங்கரின் கருத்து, அத்தொகுதிகளை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்கிறோம் என்பது எனது கருத்து என்று கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

Tags : Tamil Nadu Congress Committee ,Ku. Richwapdrundakai ,Chennai Airport ,K. Stalin ,
× RELATED முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்...