பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகுகிறார் என்றும் அவரது மகனுக்கு துணை முதல்வர் பதவி தர பாஜ முடிவு செய்துள்ளது என்றும் பாஜவை சேர்ந்தவர் முதல்வராகிறார் என்ற தகவலால் மாநில அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நிதிஷ்குமார்(75) தொடர்ந்து 10 வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். பாஜ கட்சியை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்கா ஆகியோர் துணை முதல்வராகினர்.
முதல்வராக பதவியேற்று 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், நிதிஷ்குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகிறார் என்றும் அவரது மகன் நிஷாந்த்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதற்கு பாஜ முடிவு செய்துள்ளது என்று நேற்று தகவல்கள் வெளியானது. இது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில், முதல்வர் நிதிஷ்குமார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இன்று மனு தாக்கல் செய்கிறார்.ஒரு வேளை மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல்வர் பதவியில் அவர் தொடர மாட்டார்.
நிதிஷ்குமாருக்கு பதிலாக பாஜவை சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்பார். நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று தெரிவித்தன. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். மாநிலங்களவை தேர்தலில் நிதிஷ் குமாரின் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பெயர்கள் கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் இதுவரை பாஜ சார்பில் யாரும் முதல்வராக இருந்தது இல்லை. தற்போது புதிய முதல்வராக பதவி ஏற்பவர்தான் மாநிலத்தின் முதல் பாஜ முதல்வர் என்ற பெருமையை பெறுவார்.
* பாஜவில் கடும் போட்டி
சட்ட பேரவை தேர்தலில் நிதிஷ் கட்சியான ஜேடியுவை(85) விட பாஜ(89) அதிக இடங்களில் வென்றுள்ளது. ஆனாலும், முதல்வருக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் அந்த கட்சிக்கு கடும் சவால்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. பீகார் முதல்வர் ஆவதற்காக பாஜவில் இருந்து தற்போதைய துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி,பாட்னா திகா எம்எல்ஏ சஞ்சீவ் சவுராஸியா, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகின்றது. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
* அமைச்சர் மறுப்பு
ஆனால் நிதிஷ்குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் என்ற தகவலை ஒன்றிய அமைச்சர் கிரிராஜ்சிங் மறுத்துள்ளார். நிதிஷ்குமார் பதவி விலகுகிறார், அவர மகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது என்பது வதந்தி என்றும் இது ஹோலி பண்டிகை தினத்தன்று (நேற்று) பரப்பப்படு அரசியல் வதந்தி என்று கிரிராஜ் சிங் நேற்று தெரிவித்தார்.
* அரசியலில் கால்பதிக்கும் நிதிஷ் மகன்
இந்த மாற்றங்களின் மூலம் நிதிஷின் மகன் நிஷாந்த் குமார் அரசியலில் நுழைவார் என கூறப்படுகிறது. அரசியல் களத்தில் இறங்குவதற்கு நிஷாந்த் குமார் சம்மதம் தெரிவித்துள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்தனர்.
