×

கோடை மழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க வேண்டிய முன்னேற்பாடுகள்: வேளாண் துறையிளர் டிப்ஸ்

மதுரை, மார்ச் 3: கோடை மழை காலங்களில் பயிர்களை பாதுகாக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் விரைவில் கோடை காலம் துவங்கவுள்ள நிலையில் அவ்வப்போது கோடை மழை பெய்யும். இந்த காலகட்டத்தில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாழை தோட்டங்களில் மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும். இதர பல்லாண்டு பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா போன்ற பயிர்களை பொறுத்தவரை காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும்.

நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்வதோடு, தோட்டத்திற்கு தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய் தடுப்பு மருந்துகள் தூர்ப்பகுதிகளில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை காற்று முடிந்த உடன் மரங்களை தேவையான தொழு உரம் இட்டு, நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். பசுமை குடில் மற்றும் நிழல் வலைக்குடிலை பொறுத்தவரை அடி பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளினால் இணைக்க வேண்டும். பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். பசுமைக்குடிலின் கட்டுமானத்தினுள் கிழிசல் ஏதேனும் இருப்பின் சரிசெய்ய வேண்டும்.

மேலும் காய்கறி பயிர்கள் மற்றும் செடிகள் அல்லது மரங்களின் அடிப்பகுதியில் மண் அணைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : Madurai ,Tamil Nadu ,
× RELATED மாநில யோகாசன போட்டியில் மதுரை மாணவிகள் அசத்தல்