×

ஈரான் உச்ச தலைவர் கொலையை கண்டித்து காஷ்மீரில் 2வது நாளாக போராட்டம்: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

ஸ்ரீநகர்: அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் 2வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பெமினா, குண்ட் ஹாசிபாத், ஜஹாங்கீர் சவுக் பகுதிகளிலும், தெற்கு காஷ்மீரின் புல்வாமாவிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. சில பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

காஷ்மீரில் போராட்டங்கள் பரவாமல் இருக்க சில பகுதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக இணைய வேகம் குறைக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் கூடுவதை தடுக்க காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முதாஹிதா மஜ்லிஸ் இ உலாமா தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு நேற்று அழைப்பு விடுத்ததன் பேரிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வன்முறையை ஏற்படுத்தக்கூடிய தீவிரவாத பிரசாரங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 28ம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில், தீவிரவாதிகள் மற்றும் உலகளாவிய தீவிரவாத குழுக்களின் சமூக ஊடக நடவடிக்கைள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூதரகங்கள், துணை தூதரகங்கள் மற்றும் இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு வலியுறுத்தி உள்ளது.

Tags : Kashmir ,Iran ,Srinagar ,Supreme Leader ,Ayatollah Ali Khamenei ,US ,Israel ,Femina ,Gund ,Hasibad ,Jahangir Chawuk ,Shia ,Muslims ,
× RELATED அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 88...