×

மேற்காசிய போர் பதற்றம்; இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி திட்டம் தொடக்கம்

புதுடெல்லி: மேற்காசிய போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவ ரூ.497 கோடி மதிப்பிலான திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருவதால் இந்திய ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்காக ஒன்றிய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய வர்த்தக அமைச்சக செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், “ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ், ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கிறோம். அதாவது, மேற்காசிய மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.497 கோடி மதிப்பிலான ரிலீஃப் என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் சரக்கு கட்டண உயர்வு, காப்பீடு மற்றும் போர் அபாய கட்டணங்களை குறைத்து, குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கிறது. இது சரக்கு கட்டண உயர்வு மற்றும் காப்பீட்டு பிரிமீயங்களுக்கு பகுதியளவு நிதி உதவி வழங்குகிறது. இதன் மூலம், மேற்காசியா, வளைகுடா நாடுகள், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன், ஈராக், ஈரான், இஸ்ரேல் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பயன் பெறும்.

மேலும், வர்த்தக அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம், நிதி சேவைகள் துறை, வௌியுறவு அமைச்சகம், ரிசர்வ் வங்கி, சிபிஐசி போன்றவை உள்பட பல்வேறு அரசு துறைகளை உள்ளடக்கிய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு அமைக்கப்பட்டுள்ளது. இது சரக்கு போக்குவரத்து பாதிப்புகளை கண்காணிக்க உதவி செய்யும்” என்றார்.

Tags : New Delhi ,Union government ,US ,Israel ,Iran ,
× RELATED “எரிசக்தி நிலையங்கள் மீதான...