×

அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 88 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர்கள் அறிவிப்பு; முன்னாள் காங்கிரஸ் எம்பி, மூத்த தலைவருக்கும் சீட்

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 88 வேட்பாளர்கள் கொண்ட தனது முதல் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது; இதில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜலுக்பாரி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜலுக்பாரி தொகுதியில் அவர் தொடர்ந்து ஆறாவது முறையாக போட்டியிடுகிறார். அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் போட்டியிடும் ஜோர்ஹாட் சட்டப்பேரவைத் தொகுதியில், தற்போதைய பாஜ எம்எல்ஏ ஹிதேந்திர நாத் கோஸ்வாமி களமிறக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பாஜவில் இணைந்த அசாம் காங்கிரஸ் எம்பி பிரத்யுத் பர்தோலோய்க்கு, திஸ்பூர் தொகுதியும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் பூபன் போராவுக்கு, பிஹ்பூரியா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் அஜந்தா நியோக்( கோலாகாட்), கல்வி அமைச்சர் ரனோஜ் பேகு (தேமாஜி – பழங்குடியினர் தொகுதி), ரூபேஷ் கோவாலா (டூம்டூமா), பினல் போரா (டிங்கான்), பிஜூஷ் ஹசாரிகா (ஜாகிரோடு – பட்டியல் சாதியினர் தொகுதி), ஜெயந்த மல்லா பருவா (நல்பாரி), அசோக் சிங்கால் (தேகியாஜூலி), கிருஷ்ணேந்து பால் (பாதர்கண்டி), கௌஷிக் ராய் (லகிம்பூர்) ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம் சபாநாயகர் பிஸ்வஜித் டைமரி, பனேரி தொகுதியில் இருந்து தமுல்பூர் – பழங்குடியினர் தொகுதிக்கும், அமைச்சர்கள் சந்திரமோகன் படோவாரி , தர்மபூரிலிருந்து திஹு தொகுதிக்கும், ரஞ்சித் குமார் தாஸ், பாதச்சர்குச்சி தொகுதியிலிருந்து பவானிப்பூர்-சர்போக் தொகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஹாப்லாங் (பழங்குடியினர் தொகுதி) தொகுதி எம்எல்ஏவும், விளையாட்டுத் துறை அமைச்சருமான நந்திதா கார்லோசாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ரூபாலி லாங்தாசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, போகாஜான் (பழங்குடியினர் தொகுதி) எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான நுமல் மோமினுக்குப் பதிலாக சூர்யா ரோங்பார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்ம சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்யவுள்ளதாகவும், மார்ச் 24 முதல் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : Assam Assembly Elections ,BJP ,Congress ,Chief Minister ,Himanta Biswa Sarma ,Jalukbari ,Assam… ,
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை...