×

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை விமான நிலையத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை விமான நிலையத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்படும் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களின் விவரங்களை டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் ஏப்.23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 15ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், விமான நிலையங்களையும் கண்காணிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, சென்னை சர்வதேச விமான நிலையம், சென்னை விமான நிலைய கார்கோ பகுதி ஆகியவற்றை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை புறப்பாடு பகுதிகளில் சுங்கச் சோதனைகளை கண்காணிக்க சுங்கத்துறை இணை ஆணையர் நிலையில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், சென்னை விமான நிலைய கார்கோ பகுதிகளில் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி பகுதிகளில் சுங்கச் சோதனை பிரிவுகளை கண்காணிக்க இணை ஆணையர் நிலையில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் கார்கோ பகுதிகளில் நடக்கும் சுங்கச் சோதனைகளில் பறிமுதல் செய்யப்படும் தங்கம், வெள்ளி, மின்சாதன பொருட்கள், போதைப் பொருட்கள், போதை மாத்திரைகள், கணக்கில் இல்லாத ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்வதோடு, கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று முழுமையாக விசாரித்து, டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக ரிப்போர்ட் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு, சென்னை விமான நிலையத்தில் உள்ள வருமான வரித் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு கூடுதலாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்திலும் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Tags : Chennai Airport ,Tamil Nadu Assembly ,Election Commission of India ,Chennai ,
× RELATED “எரிசக்தி நிலையங்கள் மீதான...