×

கோடை வெயிலின் தாக்கத்தால் ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைகிறது

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு வரும், வெயிலின் தாக்கத்தால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை மற்றும் பூங்காவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், அணையின் அழகை கண்டு ரசிக்கின்றனர். பின் பூங்காவில் வெகுநேரம் குடும்பத்துடன் பொழுதை கழித்து செல்கின்றனர். இதில் விடுமுறை நாட்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை, வெயிலின் தாக்கம் குறைவாக இருந்ததால், ஆழியார் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் என்ணிக்கை, விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் என தினமும் அதிகமாக இருந்தது. அதிலும் பொங்கல் பண்டிகை, குடியரசு தின தொடர் விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை தினமும் சுமார் 6 ஆயிரத்துக்கு மேல் கடந்தது.

ஆனால், கடந்த ஜனவரி மாதம் இறுதியிலிருந்து கடந்த ஒரு மாத்தத்திற்கு மேலாக, வெயிலின் தாக்கம் அதிகமானதால், ஆழியார் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவானது.

கடந்த வாரத்தில் லேசான மழை பெய்ததுடன், வெயிலின் தாக்கம் சற்று குறைவானது. ஆனால் அதற்குபின், கடந்த சிலநாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகமானது.

ஆழியார் அணைப்பகுதியை சுற்றிலும் தற்போது வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இதனால், விடுமுறை நாட்களில் சுமார் 1500 ஆயிரம் பயணிகளுக்குள்ளும், பிற நாட்களில் 500க்கும் குறைவான பயணிகள் மட்டுமே வந்து சென்றனர்.

இந்த வாரத்தில் கடந்த 2 நாட்களாக விடுமுறை நாட்கள் இருந்தாலும், மாலை நேரத்தில் மட்டும் ஓரளவு சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. பகல் நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்துள்ளனர்.

இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக இருந்தாலும், ஆழியார் அணைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால், எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும், பூங்காவிலும் பயணிகள் சொற்ப அளவிலே இருந்தனர்.

ஆழியார் அணைக்கு தற்போதே, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால், எப்போதும் வாகனங்கள் நிறைந்த இடமாக இருக்கும், பூங்காவை தொட்டுள்ள ரோட்டில் ஒரு சில வாகனங்களே நிறுத்தப்பட்டிருந்தது.

மார்ச் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்போதும், பள்ளிகளில் தேர்வு நெருங்கும் வேலையிலும் பயணிகள் வருகை மேலும் குறைவாக வாய்ப்புள்ளது. அந்நேரத்தில், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Aliyar ,Pollachi ,Aliyar Dam and ,Park ,Pollachi… ,
× RELATED எத்தனை சீட், எந்த சின்னம்? கமல் கட்சி ஆலோசனை