×

தின்னரை குடிக்க வைத்து கொன்றதில் திருப்பம் பக்கெட் நீரில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்றேன்: விசாரணையில் தந்தை வாக்குமூலம்

சென்னை, மார்ச் 2: சென்னை கொளத்தூர் அடுத்த ராஜா கார்டன் அவுசிங் போர்டு பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார் (35), பெயின்டர். இவரது மனைவி பிரீத்தி (32). தம்பதிக்கு 7 வயதில் 2ம் வகுப்பு படிக்கும் லியா, அங்கன்வாடி மையம் செல்லும் 4 வயது சுபிக்‌ஷா ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், மனைவி மீது பிரதீப் குமார் சந்தேகப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனைவியை பிரிந்து கடந்த 3 மாதங்களாக தனது 2 பெண் குழந்தைகளுடன் பிரதீப் தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர், குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கடந்த மாதம் 9ம் தேதி மாமல்லபுரம் வந்துள்ளார். அங்கு ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் 14ம் தேதி பிரதீப் குமார் தனது உறவினர்களை வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு, நான் கடுமையான மன உளைச்சலில் உள்ளேன். அதனால், நானும், எனது 2 மகள்களும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

பின்னர், மாமல்லபுரம் போலீசார் லாட்ஜுக்கு சென்று பார்த்த போது, 2 பெண் குழந்தைகள் இறந்த நிலையிலும், பிரதீப் குமார் வாயில் நுரை தள்ளிய நிலையிலும் கிடந்துள்ளனர். பின்னர், பிரதீப்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில், 2 குழந்தைகளை கொன்றதாக மாமல்லபுரம் போலீசாரால் பிரதீப் குமார் கைது செய்யப்பட்டார்.

பிரதீப்குமார் போலீசில் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு:
மனைவி மீது நல்ல மரியாதை வைத்திருந்தேன். ஆனால், அவள் என்னையும், எனது குழந்தைகளையும் விட்டு சென்றார். இதனால், கடந்த ஒரு மாதமாக தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தேன். பின்னர், எனது 2 பெண் குழந்தைகளையும் மாமல்லபுரம் லாட்ஜுக்கு அழைத்து வந்து, குளியலறையில் உள்ள பக்கெட்டில் தண்ணீர் பிடித்து தலையை மூழ்கடித்து கொன்றேன். பின்னர், 2 குழந்தைகளும் இறந்தார்களா என எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், வாயில் தின்னர் ஊற்றி, நானும் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன். குழந்தைகளை தின்னர் ஊற்றி கொன்றதாக நாடகமாடினேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, பிரதீப் குமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.

Tags : Chennai ,Pradeep Kumar ,Raja Garden Housing Board ,Peravallur ,Kolathur, Chennai ,Preethi ,Lia ,Anganwadi ,
× RELATED பெரம்பூர் அடுக்குமாடி குடியிருப்பில்...