×

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை 38வது பட்டமளிப்பு விழா

சென்னை, பிப்.28: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் 50,159 பேர் பட்டங்களை பெற்றனர். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். விழாவில், மருத்துவத்தில் 12,016 பேரும், பல் மருத்துவத்தில் 2,569 பேரும், இந்திய முறை மருத்துவத்தில், 3,269 பேரும், மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளில் 32,305 பேர் என மொத்தம் 50,159 பேர் பட்டங்களை பெற்றனர். குறிப்பாக, 58 முனைவர் பட்டங்கள், 144 பேர் தங்க பதக்கமும், 42 பேர் வெள்ளிப்பதக்கமும், 51 பேர் அறக்கட்டளை சான்றிதழும், 166 பேர் பல்கலை சார்பிலான பதக்கங்கள் என மொத்தம் 353 பேர் பெற்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த ஸ்வேதா என்ற மாணவி 9 பதக்கங்களை பெற்றார். அதேபோல், முதுநிலை பட்டம் பெற்ற சுருதி, நிரஞ்சனா, ஆஷா ஆகியோர் தலா 6 பதக்கங்களை பெற்றனர். விழாவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி உத்தரபிரதேச மாநில தலைநகரான லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் திமான், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், ஆளுமைக்குழு உறுப்பினர்கள், ஆட்சி மன்றம் மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் டீன்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி பேசியதாவது: இந்த பல்கலைக்கழகத்தில் புதிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக செயலாற்றும் மாணவனுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 75 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 5க்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது. மருத்துவ அறிவியலுடன், தொழில்நுட்ப கற்றலை ஊக்குவிக்கும் வகையில், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, வேலூர் தொழில்நுட்ப கல்லூரி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த மருத்துவ படிப்புகளும் ஊக்குவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் இடையே புதுமை, ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சிந்தனையின் ஆரம்பகால ஆர்வத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது, மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மா.சுப்பிரமணியன், காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டமளிப்பு விழாவில் மா.சுப்பிரமணியன் பங்கேற்க முடியாத நிலையில், துறையின் செயலர் செந்தில்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரும் விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Dr. MGR Medical University 38th Convocation Ceremony ,Chennai ,38th Convocation Ceremony ,Dr. MGR Medical University ,Guindy, Chennai ,Tamil Nadu… ,
× RELATED 16 ஆண்டு கால இழுபறிக்கு பிறகு பரங்கிமலை...