×

வளசரவாக்கத்தில் ஓ.ஜி கஞ்சா விற்ற அதிமுக பிரமுகர் மகன் உள்பட 3 பேர் கைது

பூந்தமல்லி, பிப்.27: வளசரவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட விலை உயர்ந்த ஒ.ஜி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் போரூர் அடுத்த மதனந்தபுரம், அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலர் தங்கி இருந்து ஓ.ஜி கஞ்சா விற்பனை செய்யப்படுவது உறுதியானதையடுத்து அதிரடியாக அந்த வீட்டிற்கு சென்று போதை தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது வீட்டிற்குள் ஓ.ஜி கஞ்சா பதுக்கி விற்பது தெரிந்தது. இதுதொடர்பாக, செம்பரம்பாக்கத்தை சேர்ந்த சுனில் (21) என்பவர் இருப்பது தெரியவந்தது.

இவர் அதிமுக ஒன்றிய துணை செயலாளர் கபிலன் என்பவரின் மகன் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சுனில் மற்றும் அவரது நண்பர்களான கோவூரை சேர்ந்த வருண் (23), அய்யப்பன்தாங்கலை சேர்ந்த விஸ்வேஸ் (22), ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 704 கிராம் ஓ.ஜி கஞ்சா, 3 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், சுனில் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வீட்டை வாடகைக்கு எடுத்து விலை உயர்ந்த ஓஜி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், இவர்களது வீட்டில் ஓ.ஜி.கஞ்சா புகைக்க வரும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அதற்கான தொகையை பெற்றுக் கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : AIADMK ,Valasaravakkam ,Poonamalli ,Narcotics Control Intelligence Unit ,
× RELATED 16 ஆண்டு கால இழுபறிக்கு பிறகு பரங்கிமலை...