×

பெரம்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை

பெரம்பூர், மார்ச் 2: சென்னையில் தீ விபத்துகளை தடுக்கவும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் அவ்வப்போது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெரம்பூர் எஸ்பிஆர் சிட்டி கட்டிடத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அவசரகால வெளியேறும் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகை பயிற்சியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால், இணை இயக்குனர் சத்ய நாராயணன், வடசென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின் காஸ்ட்ரோ, மத்திய சென்னை தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா, புறநகர் தீயணைப்பு அலுவலர் லோகநாதன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வடசென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இந்த பாதுகாப்பு ஒத்துகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மிக உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அங்கிருந்து எவ்வாறு பொதுமக்கள் கீழே வருவது என்பது குறித்தும், தீ விபத்து ஏற்பட்ட உடன் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொண்டு வீட்டிலிருந்து பத்திரமாக வெளியேறுவது என்பது குறித்தும் தத்ரூபமாக தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை செய்து காட்டினர்‌.

மேலும் தீ விபத்து ஏற்பட்டால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு அந்த தீயை அணைக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. தீயணைப்பு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் மற்றும் குடியிருக்கும் நபர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் பயிற்சியளித்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், கயிறு மூலம் எவ்வாறு மிகப்பெரிய கட்டிடங்களில் இருந்து இறங்குவது என்பது குறித்து நன்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை வைத்து செய்து காண்பித்துள்ளோம். தீயணைப்புத் துறையில் ஆட்கள் பற்றாக்குறை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஒவ்வொரு முறையும் தேவையான ஆட்களை தகுதி அடிப்படையில் எடுத்துக் கொண்டுதான் உள்ளோம். தீயணைப்பு பாதுகாப்பு சம்பந்தமாக பொதுமக்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம்.

பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள செக்யூரிட்டி சர்வீஸில் வேலை செய்யும் நபர்கள் தொழிற்சாலைகள் என பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு தீ பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அடுத்த வாரம் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கே சென்று தீ பதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் எனத் தெரிவித்தார்.

Tags : Perampur ,TAMIL NADU ,FIRE AND RESCUE OPERATIONS DEPARTMENT ,CHENNAI ,
× RELATED தின்னரை குடிக்க வைத்து கொன்றதில்...