×

சேலம் அரசு மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறிய பெட் ஸ்கேன் கருவி ₹14 கோடியில் அமைக்க நடவடிக்கை

சேலம், பிப்.9: மனிதர்களின் உடலில் உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவர்களுக்கு அதிகமாக உதவியது எக்ஸ்ரே பரிசோதனை. அதனை தொடர்ந்து அல்ட்ரா சவுண்ட், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஜ ஸ்கனே் என ஒன்றன் பின் ஒன்றாக வந்தது. தற்போது, பெட் ஸ்கேன் முறையும் நடைமுறையில் உள்ளது.

பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்பதன் சுருக்கம் தான் பெட். ஆரம்பத்தில், உடலில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என கண்டறிய சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம், உடலின் உள்ளே கட்டி இருப்பது அவற்றில் தெரியும். ஆனால், அந்த கட்டி புற்று நோய் கட்டியா, சாதாரண கட்டியா என்பது ஆரம்பத்தில் தெரியாது. அதற்காக ஊசிக்குழலை உடலுக்குள்ளே செலுத்தி திசுக்களை உறிஞ்சி எடுத்து அல்லது அறுவை செய்து பாதிக்கப்பட்ட உறுப்பிலிருந்து சிறிய அளவில் திசுவை வெளியில் எடுத்து பரிசோதனை செய்து தெரிந்து கொள்வார்கள். இதனால் நோயாளிகள் முடிவுகள் தெரிய ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த பெட் ஸ்கேன் மூலம் உடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆரம்ப கட்டத்தில் எளிதாக கண்டறிய முடியும்.

குறிப்பாக, புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் உள்ளவர்கள், புற்றுநோய் பரவி உள்ளதா என்பதை அறியவும், புற்றுநோய் சிகிச்சை எடுப்பவர்களுக்கு எந்த அளவுக்கு பலன் கொடுத்துள்ளது என தெரிந்து கொள்ளவும், சிகிச்சைக்கு பிறகும் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என தெரிந்து கொள்ளவும் பல்வேறு பாதிப்புகளை பெட் ஸ்கேன் மூலம் எளிதில் கண்டறிய முடியும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு பிறகு, சேலம் அரசு மருத்துவமனையில் ₹14 கோடியில் பெட் ஸ்கேன் கருவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், ‘சேலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் புற்றுநோய் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு கீமோதெரபி, ரேடியோ தெரபி, பொது அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புற்றுநோய் சிகிச்சை பிரிவினை நவீனப்படுத்தும் வகையில், லீனியர் கருவி ₹24 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் கூட புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என எளிதில் கண்டறியும் வகையில் ₹14 கோடியில் பெட் ஸ்கேன் கருவி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags : Salem Government Hospital ,
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்