×

4 நாட்களாக நடைபெற்று வந்த வேலூர் விஐடியில் சர்வதேச கலை விழா நிறைவு: நடிகை ஜெனிலியா பங்கேற்பு

சென்னை: வேலூர் விஐடியில் ரிவேரா சர்வதேச கலை விழா இசை நிகழ்ச்சியுடன் நேற்று நிறைவு பெற்றது. வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா சர்வதேச கலை விழா கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. ரிவேரா கலை விழாவின் நிறைவு நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை ஜெனிலியா தேஷ்முக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்து பேசியதாவது:
விஐடி ரிவேரா கலை விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். மேலும், வரும்காலத்தில் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வர வேண்டும். மாணவர்கள் தங்களது கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டும். நடிகையாக இருந்து படதயாரிப்பு நிறுவனம் மற்றும் தொழில்முனைவோராக இருந்து வருகிறேன். மாணவர்களும் அவரவர் பாடத்தில் சிறந்து விளங்கி முன்னேற்றம் அடைய வேண்டும். தென்னிந்திய படங்களில் நடித்து அந்தந்த மொழி கற்கும் வாய்ப்பும், கலாசாரத்தையும் அறியும் வாய்ப்பும் கிடைத்தது” என்றார்.

விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: விஐடி பல்கலைக்கழகம் உயர்கல்வி வழங்குவதில் நாட்டிலேயே முதன்மையாக விளங்குகிறது. அதேபோல, விளையாட்டு மற்றும் கலை பிரிவுகளில் விஐடி பல்கலைக்கழகம் முதன்மையாக விளங்க வேண்டும் என்றார். ரிவேரா சர்வதேச கலை விழாவில் 150-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகள், 28 மாநிலங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழாவில் ரூ.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

நிறைவு விழாவில் கலை பிரிவில் சென்னை விஐடி பல்கலைக்கழகம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. விளையாட்டு பிரிவில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. அதைத்தொடர்ந்து டி.ஜே-க்கள் ஷான் மற்றும் ரித்விஷ் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவு விழாவில் துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, ரிவேரா ஒருங்கிணைப்பாளர் பெல்வின் எட்வர்ட் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : 4-day International Arts Festival ,Vellore VIT ,Genelia ,Chennai ,Rivera International Arts Festival ,Vellore ,VIT University ,Rivera Arts Festival ,
× RELATED கடந்த வாரம் அமித்ஷா வந்தார், 2 நாளைக்கு...