×

ரஞ்சி கோப்பை பைனல் ஜம்மு காஷ்மீர் 527 ரன்: அனீஸை தலையால் முட்டிய கேப்டன்

ஹுப்பாலி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் 2வது நாளில், ஜம்மு காஷ்மீர் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 527 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி, கர்நாடகாவின் ஹுப்பாலி நகரில் கடந்த 24ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா- ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி, முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்திருந்தது. இந்நிலையில் நேற்று 2ம் நாள் ஆட்டம் துவங்கியது. முதல் நாளில் சிறப்பாக ஆடி 117 ரன்கள் விளாசியிருந்த சுபம் புந்திர், நேற்று 4 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து அப்துல் சமத் 61, கனையா வாதவான் 70, கேப்டன் பரஸ் தோக்ரா 70 ரன்கள் குவித்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். போட்டியின் இடையில் கர்நாடகா அணியின் மாற்று வீரராக களத்தில் நின்றிருந்த கே.வி.அனீஸ் உடன் ஜம்மு காஷ்மீர் கேப்டன் பரஸ் தோக்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது தலையில் முட்டியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 156வது ஓவர் முடிவில், அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 527 ஆக இருந்தபோது மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது, ஷாஹில் லோத்ரா 57, அபித் முஷ்டாக் 20 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர உள்ளது.

Tags : Ranji Cup Final ,Jammu ,Kashmir ,Anees ,Hubballi ,Ranji Cup cricket ,Jammu and Kashmir ,Ranji Cup cricket final ,Hubballi, Karnataka ,
× RELATED உலக கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றில்...