×

ஆந்திராவில் பயங்கரம் கலப்பட பால் குடித்த 4 பேர் பலி

 

திருமலை: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்த 4 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியில் உள்ள லாலா செருவு சவுடேஷ்வரி நகரை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 14க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சிலநாட்களுக்கு முன் வாந்தி, சிறுநீர் கழிக்க இயலாமை போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டு நகரத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கலப்பட பால் குடித்து அனுரியா நோய் தாக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி(75), ராதாகிருஷ்ணா(70), சேஷகிரி ராவ்(72) மற்றும் ரமணி ஆகியோர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள 274 பேரின் ரத்த மாதிரிகள் சேகரித்து அதிகாரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பினர். இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமான, நரசாபுரம் பகுதியை சேர்ந்த பால் வியாபாரி நாகேஸ்வர ராவ், 42 பேரிடம் பால் சேகரித்து, விநியோகம் செய்த பால் குடித்ததில் பலர் அவதிக்குள்ளானது தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியில் பால் விநியோகம் செய்பவர்களிடம் இருந்து, பால் மாதிரிகள் சேகரித்து அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். நாகேஸ்வர ராவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

 

Tags : Andhra Pradesh ,Tirumala ,East Godavari district ,Lala Cheruvu Chowdeshwari town ,Rajahmundry, East Godavari district, Andhra Pradesh ,
× RELATED இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் followersஐ...