×

என்.சி.இ.ஆர்.டி 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நீதித்துறை ஊழல்’ பாடம் நீதித்துறையை அவமதிப்பதை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பாடத் திட்டங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி தயாரித்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 2005ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் அவ்வப்போது சில மாற்றங்களும், இணைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் 2020ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாற்றங்களை பாடத்திட்டங்களில் என்.சி.இ.ஆர்.டி செய்யத் தொடங்கியுள்ளது.

அதன்படி, 8ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன “நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற பாடத்தில் சில தலைப்புகளை புதிதாக என்.சி.இ.ஆர்.டி இணைத்துள்ளது. அதில்,\\” நீதித்துறை கட்டமைப்பைத் தாண்டி, நீதித்துறை ஊழல் மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது சர்ச்சையில் சிக்கும் நீதிபதிகளை முறையான விசாரணைக்குப் பின் பதவி நீக்கம் செய்தல், ஊழல் காரணமாக ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்கள் நீதித்துறையை நாடுவதில் உள்ள சிக்கல்கள் ஆகிய குறித்த புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 5.3 கோடியே வழக்குகள் பற்றியும் அதில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மேலும், 2017ம் மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்வழியாக 1,600 புகார்கள் நீதித்துறை மீது வந்துள்ளதாகவும் அந்தப் பாடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வின் முன்னிலையில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில்,\\” என்.சி.இ.ஆர்.டி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீதித்துறை ஊழல் என்று சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும். குறிப்பாக இந்த விவகாரம் என்பது மாணவர்களின் மனதில் நீதித்துறை குறித்த எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும். அது வரும் காலத்தில் ஆபத்தான ஒன்றாக அமைந்து விடும். எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தெரிவித்தார்கள்.

இதையடுத்து முறையீட்டை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், ” இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் நீதித்துறை என்ற உன்னதமான அமைப்பை யாரும் அவமதிக்க முடியாது. அதற்கு அனுமதிக்கவும் முடியாது. இதில் சட்டம் தனது கடமையைச் கண்டிப்பாக செய்யும். பிஞ்சுக் குழந்தைகளுக்கு நீதித்துறை ஊழல் நிறைந்தது என்று கற்பிப்பது மிகவும் கவலைக்குரியது ஆகும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பாடத் திட்டம் விவகாரத்தில் வழக்கறிஞர்கள், அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர். இதுப்போன்ற சூழலில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் நேரடி தலையீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்தப் பிரச்னை கல்வி மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து கையிலெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 1,200-க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்களில் 309 இடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 26,000 நீதிபதி பணியிடங்களில் 4,800-க்கும் மேற்பட்டவை காலியாக உள்ளன.

* பாடத்தை நீக்க என்சிஇஆர்டி பரிசீலனை
உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்த நிலையில், சர்ச்சைக்குரிய பாட அத்தியாயங்கள் என்சிஇஆர்டி இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய புத்தகத்தில் இருந்து பாடப்பிரிவை நீக்குவது தொடர்பாக பாட வல்லுநர்கள் மற்றும் அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தி உள்ளனர். எனவே விரைவில் இந்த பாடம் நீக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக என்சிஇஆர்டி தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி எந்த பதிலும் தரவில்லை. என்சிஇஆர்டி தன்னாட்சி அமைப்பு என்றாலும், இதுபோன்ற அத்தியாயங்களை சேர்ப்பது குறித்து அதிகாரிகள் கவனமாக இருந்திருக்க வேண்டுமென ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. புத்தகத்தில் சேர்க்கப்பட்ட வழக்கு தேக்கம் உள்ளிட்ட விவரங்களை மறுசரிபார்ப்புக்காக என்சிஇஆர்டி தங்களை அணுகவில்லை என ஒன்றிய சட்ட அமைச்சகமும் தெரிவித்துள்ளது. நீதித்துறை தொடர்பான சர்ச்சைக்குரிய இத்தகவல்களை பாடபுத்தகத்தில் சேர்க்க ஒன்றிய அரசும் விரும்பவில்லை.

* நீதித்துறையில் ஊழல் பாடநூல் என்ன சொல்கிறது
என்சிஇஆர்டி வெளியிட்ட 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாட நூலில் இடம் பெற்றுள்ள நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு என்ற பாடத்தில் கூறப்பட்டிருப்பதாவது: போதிய நீதிபதிகள் இல்லாமை, சிக்கலான சட்ட நடைமுறைகள், குறைபாடான உட்கட்டமைப்பு போன்ற பல காரணங்களால் இந்திய நீதித்துறையில் மிகப்பெரிய அளவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் நியாயமான காலக்கெடுவில் தீர்வு காணப்படாதபோது, நீதிமன்றத்தை அணுகும் மக்களுக்கு “நீதி மறுக்கப்பட்டது” என்ற உணர்வு ஏற்படுகிறது. இதனை “தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே”.

புள்ளிவிவரங்களின்படி, உச்ச நீதிமன்றத்தில் சுமார் 81,000 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 62 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 4.7 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பாதிக்கு மேற்பட்டவை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வின்றி உள்ளன. நீதித்துறையின் பல நிலைகளில் மக்கள் ஊழலை அனுபவிக்கிறார்கள். இது ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு நீதியை அணுகுவதில் மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையை உயர்த்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் மாநில மற்றும் மத்திய அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

நீதிபதிகளுக்கு எதிரான புகார்கள் தொடர்பாக, இந்தியாவில் உள்-தீர்வு முறை உள்ளது. புகார்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படுகின்றன. 2017 முதல் 2021 வரை 1,600-க்கும் மேற்பட்ட புகார்கள் ஒன்றிய அரசின் புகார் பதிவு இணைய தளத்தில் பதிவாகி உள்ளன. சில சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றம் தலையிட்டு நீதிபதிகளை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் கடந்த ஜூலை 2025ல் கூறும்போது, துரதிர்ஷ்டவசமாக, நீதித்துறையினுள்ளேயே ஊழலும் தவறான நடத்தை சம்பவங்களும் வெளிப்பட்டுள்ளன.

இத்தகைய நிகழ்வுகள் பொதுமக்களின் நம்பிக்கையில் தவிர்க்க முடியாத வகையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி, முழு அமைப்பின் நேர்மையின் மீதான நம்பிக்கையை குலைக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன. ஆனால் இந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வழி, இவ்வாறான பிரச்னைகளை விரைவாக, உறுதியுடன் மற்றும் வெளிப்படையாக கையாள்ந்து தீர்வு காண்பதில்தான் உள்ளது. இந்த நம்பிக்கை சிதைவடையுமானால், உரிமைகளுக்கான இறுதியான தீர்ப்பாளராக இருக்கும் நீதித்துறையின் அரசியலமைப்பு பங்கு பலவீனப்படும் அபாயம் உள்ளது. வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் ஜனநாயகத்தின் அடிப்படை பண்புகளாகும் என்றார். இவ்வாறு பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,Chief Justice ,NCERT ,New Delhi ,National Institute of Educational Research ,CBSE ,
× RELATED வங்கி மோசடி வழக்கு அனில் அம்பானியின்...