×

தச்சூர்-சித்தூர் இடையே ரூ.3,998 கோடியில் 6 வழி பசுமை எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் 90 சதவீதம் நிறைவு: விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

திருத்தணி, பிப்.21: பொன்னேரி அருகே தச்சூரர்- ஆந்திர மாநிலம் சித்தூர் இடையே ரூ.3998 கோடியில், 6 வழி பசுமை எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வாகன பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுத்து, தமிழ்நாட்டில் வடக்கில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே, தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 116 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 6 வழி பசுமை எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க ரூ.3,998 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலை 716பி பணிகள் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கியது.

சென்னை நகரில் கனரக வாகனங்களால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், துறைமுகங்களில் இருந்து வர்த்தகம் எளிமைப்படுத்தி பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில், சித்தூர்-தச்சூர் 6 வழி பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. திருப்பதி, பெங்களூரு நகரங்களை இணைக்கவும், சென்னையில் காமராஜர் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இருந்து சரக்கு போக்குவரத்து சேவைக்காக பசுமை எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டது. இதற்காக, பள்ளிப்பட்டு அருகே நெடியம், திருமலைராஜ்பேட்டை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 14.03 எக்டேர் நிலம் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் கையகப்படுத்தி அதற்கு மாறாக வனத்துறைக்கு கோணசமுத்திரம், மைலர்வாடா ஆகிய பகுதிகளில் 28 எக்டேர் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. அதிவேக பசுமை எக்ஸ்பிரஸ் வழி சாலைப் பணிகளுக்காக 4 தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில், சித்தூர் முதல் 43 கி.மீ., பள்ளிப்பட்டு பகுதியில் 17.5 கி.மீ, நகரி பகுதியில் 34.66 கி.மீ, ஊத்துக்கோட்டை பகுதியில் 20.06 கி.மீ., என்று எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் 4 ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இச்சாலையில் 10 உயர்மட்ட பாலங்கள், 33 சிறு பாலங்கள், 2 பகுதிகளில் ரயில்வே உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வடக்கு பகுதியில் இருந்து திருப்பதி, பெங்களூர் பகுதிகளுக்கு விரைவாக எளிதில் செல்ல, இச்சாலை பயண நேரத்தை வெகுவாக குறைத்து அதிவேகமாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதி, திருத்தணி போன்ற ஆன்மீக நகரங்களுக்கு செல்வோர் வசதிக்காக நகரி பகுதியில் அணுகு சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சாலையில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்லவும் அணுகு சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணுகு சாலையில் இருந்து சோளிங்கர், பள்ளிப்பட்டு உட்பட பிற பகுதிகளுக்கு எளிதாக பயணிக்க முடியும். இந்நிலையில், இந்த பசுமை எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Green Express Road ,Thachur ,Chittoor ,Tiruttani ,Ponneri ,Andhra Pradesh ,
× RELATED தத்தைமஞ்சி-ஆண்டார்மடம் இடையே...