பொன்னேரி, பிப்.21: கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள், ஆரணியாற்று கரை பகுதியில் அமைக்கப்பட்ட உபரிநீர் கால்வாய் தடுப்பணை இடிந்து விழுந்துள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பொன்னேரியின் ஒருபுறம் கொசஸ்தலை ஆறு மறுபுறம் ஆரணி ஆறு பாய்ந்து எண்ணூர் மற்றும் பழவேற்காடு முகத்துவாரம் வழியே கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் ஏற்படும் பெருவெள்ளத்தால் ஆரணி ஆற்றங்கரை இருபுறமும் சேதம் ஏற்பட்டு பொதுமக்கள் வசிக்கும் கிராமங்கள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 8 கோடி மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சாமு.நாசர் கரை பலப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார். பொன்னேரி அருகே, உள்ள ஏலியம்பேடு கிராமத்தில் இருந்து பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார்மடம் வரை திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பணிகள் முழுமையாக முடியவில்லை. ஆரணி ஆற்று கரை பகுதி பலப்படுத்தும் பணிக்கு 150 கோடி ஒதுக்கி ஆண்டார் மடம் அணைக்கட்டு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், 20 கோடி மதிப்பீட்டில் தத்தைமஞ்சிக்கும்-ஆண்டார்மடத்திற்கும் இடையே கம்மாளமடத்தில் உள்ள உபரிநீர் கால்வாய் தடுப்பணை அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அணை கட்டி இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடியாத நிலையில் தடுப்பணை சுவர்கள் இடிந்து பெயர்ந்து விழுந்துள்ளது. அணையின் சுற்று சுவர் முழுவதும் அதிக மணல் கொண்டு தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் தற்போது சுவர் முழுவதும் வெடிப்புகள் ஏற்பட்டு பாலம்பாலமாக பெயர்ந்து விழுந்து உள்ளது. பணிகள் முழுமையாக முடியாத சூழலில் பணிகள் நடைபெறாமலேயே பில் போட்டு முடித்துள்ளதாக அறிந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மக்களின் உயிரோடு விளையாடும் பொதுப்பணிதுறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
