×

கிழக்கு கடற்கரையில் 6 வழி மேல்மட்ட சாலை மேல்முறையீடு முடியும்வரை பணிகளை மேற்கொள்ள கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி மேல்மட்ட சாலை பணிக்கான டெண்டர் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அளிக்கும் மேல்முறையீடு மீது முடிவெடுக்கும் வரை ஒப்பந்த பணிகளை வழங்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றுவது தொடர்பாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது.

இதில், தொழில்நுட்ப டெண்டர் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து போபாலை சேர்ந்த திலீப் பில்ட்கான் என்ற நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, டெண்டர் இறுதி செய்யும் முன்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து திலீப் பில்ட்கான் நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிசங்கர், உள்நோக்கத்துடன் தங்கள் டெண்டர் நிராகரிக்கப்பட்டுள்ளது. டெண்டர் நிராகரிக்கப்பட்டதற்காக கூறிய காரணங்கள் தன்னிச்சையானவை என்று வாதிட்டார். தமிழக அரசுத்தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, டெண்டர் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு மீது 10 நாட்களில் முடிவெடுக்கப்படும். அதுவரை ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி ஒப்பந்தப்பணி வழங்கப்பட மாட்டாது என்றார். அரசு தரப்பின் இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், டெண்டர் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து 5 நாட்களில் அரசுக்கு மேல்முறையீடு செய்ய மனுதாரர் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த மேல்முறையீடு மீது 10 நாட்களில் அரசு முடிவெடுக்க வேண்டும். அதுவரை ஒப்பந்த பணிகளை வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டு மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : High Court ,Tamil Nadu government ,East Coast ,Chennai ,Madras High Court ,East Coast Road ,Thiruvanmiyur… ,
× RELATED ரம்ஜானை முன்னிட்டு பள்ளி...