×

வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் 16 உழவர் அங்காடிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் 16 உழவர் அங்காடிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். உழவர்கள் வளம் பெறுவதுடன் நுகர்வோர்களின் நலமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயர் சிந்தனையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 கோடியே 06 லட்சம் ரூபாய் செலவில் 11 உழவர் அங்காடிகள் மற்றும் 5 நடமாடும் உழவர் அங்காடிகள் மூலம் விவசாயிகளின் காய்கறிகள், பழங்கள், பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், பால் பொருட்கள், பனைப் பொருட்கள், பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய ஏதுவாக மொத்தம் 16 உழவர் அங்காடிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக 100 மதிப்புக்கூட்டும் மையங்கள்’ இத்திட்டத்தில் 25 முதல் 35 சதவீதம் வரை முதலீட்டு மானியமும், அதிகபட்சமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. இவை தவிர, 5 ஆண்டுகளுக்கு 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. கூடுதலாக வேளாண் கட்டமைப்பு நிதி திட்டத்தில் 3 சதவீத வட்டி மானியமும் பெறலாம். இத்திட்டத்தில் தக்காளி, மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கை, மஞ்சள், வாழை, மா, பலா, தென்னை, மல்லிகை, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களுக்கு தகுந்த மதிப்புக்கூட்டுதல் மையங்கள் அமைக்க மானியமாக தமிழ்நாடு அரசால் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 54 தொழில் முனைவோர்களுக்கு மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைத்திட மானியமாக 30 கோடியே 42 லட்சம் ரூபாய்க்கான ஒப்புதல் ஆணைகளை முதல்வர் வழங்கினார். மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இயந்திர வாடகை சேவையினை வலுப்படுத்த 13 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 10 டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள், சட்டிக்கலப்பைகள், 11 சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்கள் போன்ற இணைப்புக்கருவிகள் உள்பட 672 இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதல்வர் நேற்று, வேளாண்மை – உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, உயர்கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 1210.52 கோடி ரூபாய் செலவிலான கட்டிடங்களை திறந்து வைத்து, 555.92 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, 43 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புக்கூட்டு மையங்களுக்கான மானியம் மற்றும் வேளாண் இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Agriculture and Farmers Welfare Department ,Chennai ,Chennai Secretariat ,
× RELATED ரம்ஜானை முன்னிட்டு பள்ளி...