×

மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டிற்கான முதல் காலநிலை நிதிநிலை அறிக்கை: மேயர் பிரியா வெளியிட்டார்

 

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டிற்கான முதல் காலநிலை நிதிநிலை அறிக்கையை ரிப்பன் மாளிகை அலுவலக கூட்டரங்கில், மேயர் பிரியா நேற்று வெளியிட துணை ஆணையர் (வருவாய் (ம) நிதி) பிரதிவிராஜ் பெற்றுக்கொண்டார். நிகழ்வில், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். சென்னை மாநகராட்சி 2025-26 நிதியாண்டிற்கான முதல் காலநிலை நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது நகராட்சி நிதி திட்டமிடலில் காலநிலை நடவடிக்கைகளை இணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. சென்னை காலநிலை செயல் திட்டத்துடன் (2023) இணைந்த இந்த முயற்சி, பொறுப்பான செலவின திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் பொறுப்புடைமை மூலம் காலநிலை அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான நகரத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

காலநிலை நிதிநிலை அறிக்கை என்பது ஒரு நகரத்தின் காலநிலை உறுதிப்பாடுகளை அதன் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செலவு முடிவுகளின் மையத்தில் வைக்கும் ஒரு நிர்வாக கட்டமைப்பாகும். 2025-26 நிதியாண்டில், மூலதன செலவினங்களுக்காக சென்னை மாநகராட்சி ரூ.3,190.61 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதில் ரூ.1,341.2 கோடி (42.04%) காலநிலை தொடர்பான செலவினங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. துறை வாரியாக, நகர்ப்புற வெள்ளம் மற்றும் நீர் பற்றாக்குறை ஆகியவை காலநிலை செலவினங்களில் மிகப்பெரிய பங்கை (62.24%) கொண்டுள்ளன. அதை தொடர்ந்து கழிவு மேலாண்மை (26.15%) மற்றும் நிலையான இயக்கம் (9.96%) ஆகியவை உள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில், தொடர் முயற்சிகள் காலநிலை நிதிநிலை அறிக்கை மிகப்பெரிய அங்கமாக 62.8% உள்ளது, இது மழை, வெள்ளம் மற்றும் நீர் தேக்கம் போன்ற காலநிலை பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கு சென்னை மாநகராட்சி மிக உதவியாக உள்ளது. அடையாளம் காணப்பட்ட காலநிலை தொடர்பான திட்டங்களில், மழைநீர் வடிகால்கள் மற்றும் மதகுகளை மேம்படுத்துதல், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் பயோ மைனிங் முறையில் குப்பைளை பிரித்து நிலத்தை மீட்டெடுத்தல், முழுமையான வீதிகள் மற்றும் சுகாதார நடைபாதை முயற்சிகள், நீர் உறிஞ்சும் பூங்காக்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல், ஏரிகளை மீட்டமைத்தல், குளங்களை புதுப்பித்தல் மற்றும் பள்ளிக் கட்டிடங்கள் ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டு காலநிலை நிதிநிலை அறிக்கையின் கீழ் அளவிடப்பட்ட நடவடிக்கைகள் 4.1 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) சமமான (tCO2e) குறைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடக்க காலநிலை நிதிநிலை அறிக்கை, சி.40 நகரங்களின் ஆதரவுடன் சென்னை மாநகராட்சியின் நிதி மேலாண்மை அலகு (எப்.எம்.பிரிவு) தலைமையில் நடத்தப்படுகிறது. இது சென்னை மாநகராட்சிக்குள் உள்ள 10 முக்கிய துறைகளில் தொடர்புடையது. சென்னை மாநகராட்சியின் நிறுவன வள திட்டமிடல் (இ.ஆர்.பி) அமைப்பில் காலநிலை நிதிநிலை அறிக்கையை ஒருங்கிணைக்கிறது. இது காலநிலை தொடர்பான செலவினங்களை முறையாக கண்காணிக்கவும், நிறுவன பொறுப்புணர்வை வலுப்படுத்தவும் உதவுகிறது.

இந்த முயற்சியின் மூலம், சென்னை மாநகரம் பொது நிதியை காலநிலை முன்னுரிமைகளுடன் சீரமைப்பதை மேம்படுத்துகிறது. இந்தியாவில் காலநிலைக்கு ஏற்ற நகர்ப்புற நிர்வாகத்தில் அதன் தலைமையை வலுப்படுத்துகிறது. 2025-26 நிதியாண்டிற்கான காலநிலை நிதிநிலை அறிக்கை, சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in, http://www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : Mayor ,Priya ,Chennai ,Deputy Commissioner ,M) Finance ,Prathiviraj ,Ribbon ,House ,Office Partnership ,Deputy ,Maheshkumar ,
× RELATED ஒன்றியம்-மாநிலங்கள் இடையேயான உறவில்...