புதுடெல்லி: அவையை நடத்துவதில் அப்பட்டமான பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், காங்கிரஸ் எம்பிக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் கூறி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தன. இதில், 118 எம்பிக்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்காத விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து கேள்வி கேட்ட 8 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர சபாநாயகர் ஓம் பிர்லா எபபோதுமே ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, சபாநாயகருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.
இதன்படி, மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், தலைமை கொறடா கே.சுரேஷ், கொறடா முகமது ஜாவேத் ஆகியோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்திற்கான நோட்டீசை மக்களவை செயலாளரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை கொடுத்தனர். அரசியலமைப்பின் 94சி பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட இந்த நோட்டீசில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, ஆர்ஜேடி, கம்யூனிஸ்டுகள், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118 எம்பிக்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்தது. மீண்டும் மார்ச் 9ம் தேதி இரு அவைகளும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அருணாச்சல பிரதேச மாநிலம் தாவங்கில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, மார்ச் 9ம் தேதி மக்களவை மீண்டும் கூடியதும் முதல் நாளிலேயே சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் அவையால் பரிசீலிக்கப்பட வேண்டும்.
இதன்படி, மார்ச் 9ம் தேதி அந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெறும். இதைத்தொடர்ந்து, வாக்கெடுப்பும் நடைபெறும் என்றார். மக்களவையில், இதற்கு முன் 3 முறை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஒருமுறை கூட தீர்மானம் வெற்றி பெற்றதில்லை. இதற்கு காரணம் அரசுக்கு அவையில் பெரும்பான்மை இருப்பதால் இந்த தீர்மானம் தோல்வியையே சந்திக்கும். ஆனால், விவாதத்தின்போது சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சிப்பார்கள்.
* முக்கிய மசோதா வருகிறது
அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில் மார்ச் 9ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இதில், பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதால், கூட்டம் சுவாரஸ்யமானதாக இருக்கும். மிகவும் முக்கியமான மசோதா ஒன்றை தாக்கல் செய்ய உள்ளோம். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுவது அவர்களுக்கு நல்லதல்ல. விவாதமின்றி தீர்மானம், மசோதாக்களை நிறைவேற்றுவோம் என்றார்.
