திருவனந்தபுரம்: திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் தன்னை அழைக்க கார் வர சற்று தாமதமானதால் கோபமடைந்த ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோவில் ஏறிச்சென்றார்.
ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி நேற்று காலை திருச்சூர் வடக்குநாதர் கோயில் தரிசனம் செய்வதற்காக சென்றார். தரிசனம் முடிந்த பின்னர் வெளியே வந்து அவர் தன்னுடைய காருக்காக காத்திருந்தார். ஆனால் கார் அவர் காத்திருந்த இடத்திற்கு வர சற்று தாமதமானது. இதனால் கோபமடைந்த சுரேஷ் கோபி, அங்கு ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில் ஏறினார்.இந்த சமயத்தில் அவரது கார் அங்கு வந்தது. ஆனாலும் காரில் ஏறாமல் சுரேஷ் கோபி ஆட்டோவில் ஏறிச் சென்றார்.
அவரது பாதுகாவலர் ஆட்டோ டிரைவரின் அருகே அமர்ந்து கொண்டார். ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோவில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
