×

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கைவரிசை; ரூ.10 கோடி கேட்டு நடிகைக்கு மிரட்டல்: கனடாவில் இருக்கும் குற்றவாளி மீது வழக்கு

மொகாலி: மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் மூளையாக செயல்பட்டவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த ஜீஷன் அக்தர் (32) ஆவார். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த இவர், கொலைக்கு தேவையான துப்பாக்கிகளை வழங்கியதோடு நிதி விவகாரங்களையும் கவனித்து வந்ததாக போலீசார் குற்றம் சாட்டினர். பாபா சித்திக் கொலைக்கு பிறகு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற ஜீஷன் அக்தர், கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் போலி கடவுச்சீட்டு விவகாரத்தில் கனடாவில் பிடிபட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணிகள் தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் மாநில நடிகையும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான ஹிமான்ஷி குரானாவுக்கு நேற்று மின்னஞ்சல் மற்றும் ஒலிப்பதிவு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதில், ‘ஜீஷன் அக்தர் குழுவிலிருந்து பேசுகிறோம், உங்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது’ என குறிப்பிட்டு 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஹிமான்ஷி குரானா மொகாலி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் பல்வேறு பிரிவுகளில் ஜீஷன் அக்தர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது நடிகையின் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயரைப் பயன்படுத்தி ஜீஷன் அக்தர் தனிப்பட்ட முறையில் இந்த மிரட்டல்களை விடுத்து வருவதாக சந்தேகிக்கும் போலீசார், இது குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Lawrence Bishnoi ,Canada ,Mohali ,Former ,Maharashtra ,minister ,Baba Siddique ,Zeeshan Akhtar ,Jalandhar, Punjab ,
× RELATED ஜனநாயக பங்கேற்பை பலவீனமாக்கும் எஸ்ஐஆர்: ப.சிதம்பரம் கருத்து