×

மக்கள் விரோதிகளுக்கு ஷாக் ; மக்களுக்கு சர்ப்ரைஸ்: இதுதான் ஸ்டாலின் ஸ்டைல்: திருப்பத்தூர் திமுக மாநாட்டில் முதல்வர் பரபரப்பு பேச்சு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மண்டலவாடி பகுதியில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாஜவைச் சேர்ந்த ஒருத்தரை வச்சு உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து தேர்தல் நெருக்கத்துல மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தணும்னு திட்டம் போட்டாங்க. அதாவது ஒன்றிய பாஜ அரசைப் பொறுத்தவரைக்கும் அவங்களுக்கு மக்களுக்கு நல்லது செய்ய மாட்டாங்க, நல்லது செய்யறவங்களையும் செய்ய விடமாட்டாங்க.

தமிழ்நாட்டு மகளிருக்காக நான் கொடுத்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை. அதுக்குத் தடை போட நான் விட்டுருவேனா? அதனாலதான் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஸ்டைல். ஓரவஞ்சனைக்கும் வஞ்சகத்துக்கும் ஒரு முகம் இருந்தா அதுதான் ஒன்றிய பாஜக அரசு. இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்குன்னு ஏதாவது ஒரு சிறப்புத் திட்டம் அறிவிச்சிருக்காங்களா? நான் திரும்பத் திரும்பக் கேட்டுக்கிட்டு இருக்கிறேன். முறையா பதில் சொல்ல இதுவரை பிரதமர் இல்ல உள்துறை அமைச்சர் வரவில்லை. அதுக்கு பதில் சொல்ல முடியல. அது இதுதான், இது இதுதான்னு ஒதுக்கப்படுகிற விதிகளைச் சொல்லி ஏமாத்திக்கிட்டு இருக்காங்க.

பாஜ தலைமையிலிருந்தும் இதுக்கு பதில் வரல. பாஜகவின் கிளைச் செயலாளராக இருக்கிற பழனிசாமி இப்போ பாஜகவின் கிளைக் கழகம் ஆயிடுச்சு அது இப்போ. பாஜகவின் கிளைக் கழகச் செயலாளராக இருக்கக்கூடிய பழனிசாமி அவர்கள்கிட்ட ஏதாவது பதில் வந்துச்சா? தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பேசுறதுக்கு துணிவில்லாம, முதுகெலும்பில்லாம, கொத்தடிமைகளாகச் செஞ்சிட்டு இருக்கக்கூடிய பழனிசாமி எனக்கு சவால் விட்டுருக்காரு. எந்த பழனிசாமி? இன்னைக்கும் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அடையாளமா சோசியல் மீடியாவில வலம் வந்துட்டு இருக்கக்கூடிய அதுக்குச் சொந்தக்காரர்தான் பழனிசாமி.

பழனிசாமி அவர்களே.. தவழ்ந்து தவழ்ந்து ஊழல் குற்றவாளியான அம்மையார் சசிகலா கால்ல விழுந்து பதவியைப் பெற்று அவங்களை கால்வாரி விட்டுட்டு, நீ எனக்குப் பதவி கொடுத்தியான்னு மரியாதையில்லாம ஒருமையில் கேட்டீங்களே. இல்லன்னு மறுக்க முடியுமா? சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசுவதற்கு உங்களுக்குத் தார்மீக உரிமை இருக்கா? உங்க கட்சியினுடைய உண்மையான பொதுச் செயலாளராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய கோடநாடு பங்களாவில நடந்த கொலை, கொள்ளை, அதைத் தொடர்ந்து நடந்த மரணங்கள்.

இதையெல்லாம் மறக்கடிச்சிரலாம்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? பொல்லாத ஆட்சிதான் பழனிசாமியுடைய ஆட்சி என்பதற்குப் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளே சாட்சியா ஆறாத வடுவா இருக்கே. ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என அமைதியாக ஊர்வலம் போன அப்பாவி பொதுமக்கள் மேல துப்பாக்கி சூடு நடத்த சொல்லிட்டு, டிவிய பாத்து தான் தெரிஞ்சுகிட்டேன்னு நாடகம் போட்டதை மக்கள் மறந்துட்டாங்கன்னு நினைக்கிறீங்களா?
சாத்தான்குளம் காவல் நிலையத்துல அப்பாவும் மகனும் அடித்துக் கொல்லப்பட்டப்போ, அவங்க உடல் நலமில்லாம இருந்ததாக கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம சொன்னீங்களே, உங்களோட அந்த கல் மனசை மக்கள் மறந்துட்டாங்கன்னு நினைச்சீங்களா? ஊழலை ஊற்றுக்கண்ணாக அதிமுகவின் பாரம்பரியத்தை காப்பாற்ற, உறவினர்களுக்கு டெண்டர்களை அள்ளி கொடுத்துட்டு, வழக்கு வந்த உடனே என்ன சொன்னாரு? தமிழ்நாடு முழுக்க சொந்தக்காரர்கள் இருக்காங்கன்னு சப்பைக் கட்டு கட்டுனீங்களே, மக்கள் மறந்துட்டாங்கன்னு நினைக்கிறீங்களா?

உங்க மேல ஊழல் வழக்கு இருக்கேன்னு கேட்டப்போ, யார் மேல தான் ஊழல் வழக்கு இல்லன்னு அசால்ட்டா பதில் சொன்ன உங்க டேலன்ட்டை என்னன்னு சொல்றது? உழவர்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை மனசாட்சி இல்லாம ஆதரிச்சு, போராடுற விவசாயிகள் மேலயே அவதூறு பரப்புனீங்களே. பச்சைத் துண்டு போட்டு பச்சை துரோகம் செஞ்ச பழனிசாமின்னு சொல்லி, உங்களை புறக்கணிச்ச விவசாயிகள் அதை மறந்திருப்பாங்கன்னு நினைச்சீங்களா? சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாஜகவோட சட்டங்களை ஆதரிச்சதோடு, அந்த மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்குனீங்களே, அந்த காயம் ஆறிடுச்சுன்னு நினைக்கிறீங்களா? குட்கா வழக்குல அதிமுக அமைச்சர்கள் சிக்கினதுக்கு உங்கள் பதில் என்ன? வருமான வரித் துறையில சொந்தக்காரங்க சிக்கினதுனால பாஜகவோட கூட்டணி வைச்சீங்களா? இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கு. இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லாம தவிர்த்தாலும், மக்களுக்கு பதில் தெரியும், உங்கள் லட்சணமும் புரியும்.

எனவே திமுக அரசு அவதூறுகளாக களங்கப்படுத்த நினைக்கிற உங்க பேச்சுகளை மக்கள் நம்ப மாட்டாங்க. நம்ம திராவிட மாடல் அரசு சாதனைகளை அரசாக இருக்கிற காரணத்தினால பழனிசாமி அவர்கள் இவ்வளவு பதட்டத்தோடு புலம்புறதுக்கு காரணம் இதுதான். ஆயிரம் ஆண்டுகள் நின்று பேசுகிற சாதனைகளை அஞ்சே ஆண்டுகளில் செஞ்சு முடிச்சிருக்கிறோம். யூடியூப்பிலையும் சோசியல் மீடியாக்கள்லையும் பாருங்க. வட மாநில சேனல்கள் எல்லாம் எப்படி சாதனைகளை செய்யுறாங்க, இப்படி சாதனைகளை செய்யக்கூடிய அரசு இந்தியாவிலேயே இல்லன்னு நம்ம திராவிட மாடல் அரசை பாராட்டுறாங்க. இங்க இருக்குற ஒவ்வொருத்தரும் நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நம்ம கவர்மெண்ட் மாதிரி சாதனைகள் செஞ்ச அரசே கிடையாது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு செஞ்ச திட்டங்களை மட்டும் இல்ல, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தொகுதிக்கும் நிறைவேற்றப்பட்டு இருக்கக்கூடிய சாதனைகளை நம்மால் பட்டியலிட்டு சொல்லிட முடியும். நல்லா புரிஞ்சுக்கோங்க, நாம போராடுறது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக்காக மட்டும் இல்ல. தமிழ்நாட்டோட வெற்றிக்காக, பாஜகவுடைய டப்பா இன்ஜின் முன்னாடி நம்முடைய திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது. இந்த உறுதியை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஏற்படுத்த வேண்டியது உங்களுடைய பணி.

களப்பணி தான் உங்களுடைய முழு பணி. நீங்க உழைக்கிற ஒவ்வொரு நிமிடமும் ஒரு புது வாக்கு நமக்கு வரும். மக்களை சந்திக்கிறப்போ நம்முடைய சாதனைகளை சொன்னால் மட்டும் போதாது. ஒன்றிய பாஜக அரசோட துரோகங்களையும் வெளிச்சம் போட்டு காட்டணும். டப்பா இன்ஜின்ல ஏறி கொத்தடிமைகள் மூலமாக தமிழ்நாட்டுக்குள்ள புழக்கடை வழியாக நுழைய நினைக்கிற பாஜகவோட எண்ணத்தை தடுத்து நிறுத்தணும். தமிழ்நாட்டுக்கு பரப்புரைக்கு வர்ற பிரதமர், தமிழ்நாட்டுக்குன்னு இந்த சாதனைகள் எல்லாம் செஞ்சிருக்கிறோம்ன்னு சொன்னாரா? இருந்தா தானே சொல்ல முடியும்? அண்மையில ஒன்றிய அரசோட பட்ஜெட் வெளியிட்டாங்களே, அதுல தமிழ்நாட்டுக்குன்னு ஏதாவது சிறப்பு திட்டங்களை அறிவிச்சாங்களா? இதை தட்டிக் கேட்கிற துணிச்சலோ தைரியமோ பழனிசாமி அவங்களுக்கு இருக்கா? அவரை பொறுத்தவரைக்கும் பொம்மைத் துப்பாக்கிக்காரன்னு சொன்னா ஸ்டாப் சொல்ற வரைக்கும் நான் ஸ்டாப்பா பல்டி அடிப்பார்.

எல்லா துரோகத்தையும் பண்ணிட்டு, கூட்டணி தர்மத்துக்காகத்தான் தமிழ்நாடு உரிமைகளை அடகு வெச்சேன்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லுவாங்க. இதையெல்லாம் நல்லா உணர்ந்துதான் அவருடைய தலைமையை, அவருடைய கூட்டணியை எதிர்க்கிறோம். எல்லாரும் ஒரிஜினல் ஓனரா பாஜக கிட்ட நேரடியாக சரண்டர் ஆகுறாங்க. எனவே அதிமுக என்பது பாஜக தேவைக்கேற்ப யூஸ் பண்ணிக்கிற ஒரு கிளை அமைப்பு என்பதை மக்கள் கிட்ட அம்பலப்படுத்தணும். தமிழ்நாடு என்ற பெயரையே மாத்தணும்னு துடிக்கிறவங்க தமிழ்நாட்டுக்குள்ள வந்தா, அவங்களுடைய சதித்திட்டங்கள் எப்படிப்பட்டதா இருக்கும்னு மக்களுக்கு நீங்கள் புரிய வைக்கணும். இந்த சதியை உணராம நம்மளோட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைத் தவிர வேறு யாருக்கு வாக்களிச்சாலும், இன்னைக்கு நாம செஞ்சிட்டு இருக்கக்கூடிய அத்தனை நலத்திட்டங்களையும் நிறுத்திடுவாங்கன்னு மக்களுக்கு நீங்கள் புரிய வைக்கணும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* ஓரவஞ்சனைக்கும் வஞ்சகத்துக்கும் ஒரு முகம் இருந்தா அதுதான் ஒன்றிய பாஜ அரசு. இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்குன்னு ஏதாவது ஒரு சிறப்புத் திட்டம் அறிவிச்சிருக்காங்களா?
* பழனிசாமி அவர்களே.. தவழ்ந்து தவழ்ந்து ஊழல் குற்றவாளியான அம்மையார் சசிகலா கால்ல விழுந்து பதவியைப் பெற்று அவங்களை கால்வாரி விட்டுட்டு, நீ எனக்குப் பதவி கொடுத்தியான்னு மரியாதையில்லாம ஒருமையில் கேட்டீங்களே. இல்லன்னு மறுக்க முடியுமா?

Tags : Stalin ,Tirupathur Dimuka Conference ,Tirupathur: ,Timuka North Zone Polling Agents Conference ,Jolarpet Mandalawadi ,Tirupathur district ,K. Stalin ,Supreme Court of Bahia ,
× RELATED உலகில் 9 கோள்கள் இருந்தாலும்...