வாஷிங்டன்: ஈரானில் தற்போது நாணய மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியற்றை கண்டித்து அரசுக்கு எதிராக கடந்த டிசம்பர் 18ம் தேதி முதல் பொதுமக்களும், வியாபாரிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் அரசுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு எடுத்த நடவடிக்கையால் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு விட்டனர்.
27,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு துணை நிற்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதனிடையே, ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பான முதல்கட்ட மறைமுக பேச்சுவார்த்தை கடந்த வௌ்ளிக்கிழமை(பிப்.6) மஸ்கட் தலைநகர் ஓமனில் நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரான் அடிபணியாது என ஈரான் வௌியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், ஈரானை நோக்கி மேலும் ஒரு அமெரிக்க போர் கப்பல் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கரிபீயன் கடல் பகுதியில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்டு ஈரானை நோக்கி பயணத்தை தொடங்கி உள்ளது. இதனால் ஈரான், அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
