வாஷிங்டன்: ஆந்திராவை சேர்ந்த மாணவி ஜான்வி கண்டுல்லா(23). கடந்த 2023ம் ஆண்டு சியாட்டில் அருகே சவுத் லேக் யூனியன் பகுதியில் சாலையை கடந்த போது அதிவேகமாக வந்த போலீஸ் ரோந்து வாகனம் மோதி பலத்த காயமடைந்த நிலையில் ஜான்வி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து சிசிடிவி கேமராவிலும் பதிவாகியிருந்தது. போலீஸ் அதிகாரி இறந்த மாணவியை கிண்டல் செய்யும் வகையில் பேசியிருந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஒரு அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். இன்னொரு அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டு 5 ஆயிரம் டாலர்(ரூ.4 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஜான்வி பலியான வழக்கில் இழப்பீடு வழங்க கோரி அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த நிலையில், வழக்கைத் தீர்ப்பதற்காக சியாட்டிலில் உள்ள அதிகாரிகள் ஜான்வி கண்டுல்லா குடும்பத்திற்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.260 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
